தமிழக சட்டமன்றத்தில் இன்று ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு மசோதா நிறைவேற்றம், கோவில்களில் திருக்குறள் வகுப்புகள், போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் நடைபெற்றது.
தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடிய சட்டமன்றத்தில் தொழில்துறை மற்றும் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு மசோதா நிறைவேற்றம்
2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்த மற்றும் நீக்கறவு சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். அதில் விழுப்புரம்,கடலூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதன்மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த வகையிலிருந்து இணைக்கப்பட்ட வகையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு சட்ட முன்வடிவில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தினை நீக்கறவு செய்வதெனவும் அரசு முடிவு செய்துள்ளது என கூறப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்தை ஆரம்ப நிலையிலே எதிர்க்கிறோம் என கூறினார். தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அவையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர் . பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
பாமக எதிர்ப்போ ஆதரவோ தெரிவிக்காத நிலையில், பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இடதுசாரிகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இந்த நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டது.
போதைப் பொருள் விற்றால் கடும் நடவடிக்கை
சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பாமக. எம்.எல்.ஏ ஜி.கே.மணி தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் முற்றிலும் தடுக்க அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்கா பொருட்கள் விற்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது; போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.
போதை போருள் விற்போர் மற்றும் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குட்கா விஷயத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது. தமிழகத்தில் இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே போதை மற்றும் மன மயக்க பொருட்கள் தடை சட்டம் 1985-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே போதைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க அந்த சட்டத்திலே புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும். புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். என கூறினார்.
தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகள்
சட்டப்பேரவையில் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகளில் சில.
தமிழ் அறிஞர்களில் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை வழங்கப்படும். இதன்படி, முனைவர் தொ.பரமசிவன், சிலம்பொலி சு.செல்லப்பன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் செ.இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.
தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாள் அன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த ரூ. 15 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
திருக்கோயில்களில், தேவாரம், திருவாசம், நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும்.
’தீராக் காதல் திருக்குறள்’ என்ற பெயரில் ஊடகங்கள் வாயிலாக தீந்தமிழ் நடத்தப்படும். இதற்கென சிறப்பு நிதியாக ரூ. 2 கோடி ஒதுக்கப்படும்.
புகழ்பெற்ற தலைவர்கள் மற்றும் தமிழறிஞர்களில் ஒலி மற்றும் ஒளிப்பொழிவுகளை ஆவணமாக்க ஆண்டுதோறும் ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கி ‘தமிழ் பரப்புரைக் கழகம்’ உருவாக்கப்படும்.
குறிப்பாக, தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் (Initials) தமிழில் எழுத வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
தொழில்துறை அறிவிப்புகள்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்படும். மேலும், ரூ.150 கோடியில் 10 சிப்காட் தொழிற்பூங்காகள் மேம்படுத்தப்படும்.
மின்னேற்றுக் கட்டமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் திருத்தப்பட்ட மின்வாகனக் கொள்கை வெளியிடப்படும். மின் வாகன உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் மின் வாகனக் கொள்கை வெளியிடப்படும்.
வலிமை என்ற புதிய வணிகப் பெயர் கொண்ட டான்செம் நிறுவனத்தின் சிமெண்ட் வெளிச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.
விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ரூ.400 கோடியில் ஒருங்கிணைந்த ஆடைப் பூங்கா உருவாக்கப்படும்.
கிருஷ்ணகிரி சூளகிரி சிப்காட் தொழிற் பூங்காவில் இந்தியாவிலேயே முதன்மையான வருங்கால நகர்திறன் பூங்கா ரூ.300 கோடியில் உருவாக்கப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.