கருணாநிதிக்கு நினைவிடம், தாம்பரம் மாநாகராட்சி ஆக தரம் உயர்த்தப்படும்; சட்டப்பேரவையில் அறிவிப்பு

Tamilnadu assembly Highlights Karunanidhi memorial Tambaram corporation: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்; சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம், தாம்பரம் மாநகராட்சியாக அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இன்றைய சட்டமன்ற கூட்டத் தொடரில் நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

கருணாநிதிக்கு நினைவிடம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 50 ஆண்டு திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதிக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில், அண்ணா நினைவிடம் அருகே, காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  விதி எண் 110ன் கீழ்  முதல்வர் ஸ்டாலின், , “மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும். கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளது” என்று அறிவித்தார். 

இந்த அறிவிப்பை வரவேற்று பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர் செல்வம், “கருணாநிதிக்கு நினைவிடம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற்கிறேன். அவரை பற்றிய அனைத்து சிறப்பம்சங்களும் நினைவிடத்தில் இடம்பெற வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன்.  எனது தந்தை தீவிர கலைஞர் பக்தர், அவர் பெட்டியில் எப்போதும் பராசக்தி பட வசன புத்தகம் இருக்கும்” என்று கூறினார். 

மாநகராட்சியாகும் தாம்பரம்

நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இதன்படி தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும், பல்வேறு நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும் மற்றும் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்ட அறிக்கையில், “தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளையும், இந்த பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளையும் ஒருங்கிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும். 

காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும்.

பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திகிராம், கூடுவாங்சேரி,பொன்னேரி, இடங்கனசாலை, தாரமங்கலம், கோட்டகுப்பம், திருநின்றவூர், சோளிங்கர், தாரமங்கலம், கூடலூர், காரமடை, வடலூர், திருக்கோயிலூர், உளுந்தூர்ப்பேட்டை, சுரண்டை, களக்காடு, அதிராம்பட்டினம், மானாமதுரை,முசிறி, கருமத்தம்பட்டி, மதுக்கரை, லால்குடி, கொல்லன்கோடு ஆகியவை நகராட்சிகளாக மாற்றப்படுவதுடன், புகளூர் மற்றும் டிஎன்பிஎல் புகளூரை இணைத்து புகளூர் நகராட்சியும் உருவாக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு 

சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மீதான மானிய கோரிக்கையின்போது பேசிய அமைச்சர் பெரியகருப்பன், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1,000ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 

முன் மாதிரி கிராம விருது

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, ரூ.2,097 கோடி மதிப்பில் ஊரக சாலைகள் மேம்படுத்துதல் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும். 12,125 நூலங்கங்கள் படிப்படியாக மேம்படுத்தப்படும். ரூ.233 கோடி மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடங்கள், கிராம ஊராட்சி கட்டங்கள் கட்டி முடிக்கப்படும். சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும்.

மணிமேகலை விருது

பெண் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அதிகரித்து வழங்கப்படும். சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும். இயற்கை வளங்களை பாதுகாக்க உள்ளூர் மகளிர் சுயக்உதவி குழுக்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீரை உறுதி செய்யும் பொருட்டு நீரின் தரத்தை பரிசோதிப்பதற்காக சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 5000 மகளிர் விவசாயிகளை உள்ளடக்கிய 50 இயற்கை பண்ணை தொகுப்புகள் உருவாக்கப்படும்.

ஊரக மற்றும் நகரப் பகுதிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்ட உடன் மாவட்ட திட்டக்குழுக்கள் அமைக்கப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly highlights karunanidhi memorial tambaram corporation

Next Story
கே டி ராகவன் சர்ச்சை வீடியோ : பெண் நிர்வாகி தலைமையில் விசாரணைக் குழு – அண்ணாமலை அறிவிப்புTamilnadu BJP Leader Annamalai Tweet about K T Ragavan Video Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com