Advertisment

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்; ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம்

Tamilnadu assembly highlights porunai museum, kodanadu issue: நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம்; சட்டப்பேரவையில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

author-image
WebDesk
New Update
நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்; ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், இன்று ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை ஒளிப்பரப்பு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

Advertisment

ஜெயலலிதா மரணம் மற்றும் கோடநாடு விவகாரம்

ஜெயலலிதா மறைந்தபோது அவரது மரணத்தில் எழுந்த சந்தேகம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்ததாக, தி.மு.க. உறுப்பினர் சுதர்சனம் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. நீதிமன்றத்தில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவது அவையின் மரபு அல்ல, அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கை விரைந்து முடிக்கத் தான் உறுப்பினர் சுதர்சனம் பேசினார்.  அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

அதுபோல் மதியம் கோடநாடு விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இதேப்போல் மதியம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். கோடநாடு பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் கழற்றப்பட்டது எப்படி? என கேள்வி எழுப்பினார்.

மேலும், கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஏன் கேமரா மாயமானது பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடநாடு இல்லத்தில் கொலை கொள்ளை நடந்தபோது, கேமரா ஏன் செயல்படவில்லை. கோடநாடு விவகாரம் சாதாரணமான விஷயமல்ல, கோடநாடு வழக்கை விசாரிக்கக் கூடாது என ஏன் நீதிமன்றம் சென்றீர்கள்? என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கோடநாடு எஸ்டேட் தனியார் சொத்து. ஜெயலலிதா மறைவுக்கு பின் அங்கு பாதுகாப்பு தரவில்லை. புலன் விசாரணை வேண்டாம் என  கூறவில்லை, வழக்கை நடத்துங்கள் என கூறினார்.

சட்டசபை நிகழ்வுகள் நேரலை

சட்டப்பேரவையில் இன்று, திமுக ஆட்சியில் சட்டசபை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைவாணர் அரங்கில் சில காரணங்களால் பேரவை கூட்டத்தை நேரலை செய்ய முடியவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை நடக்கும் போது நேரலை செய்யப்படும் என்றார்.

பொருநை அருங்காட்சியகம்

சட்டப்பேரவையில் இன்று, அகழாய்வுப் பணிகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அறிவிப்புகள்…

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கீழடி அகழாய்வை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. கீழடி அகழாய்வை மத்திய அரசு பாதியில் கைவிட்டது. ஆனால் தற்போது கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு கீழடிக்கு நான் நேரில் சென்று பார்வையிட்டபோது, அங்கு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டது. தமிழ் சமூகம் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சங்க இலக்கிய சமூகம் என்று தெரிவித்தது கீழடி தொல்லியல் ஆய்வு.

பண்டைய நாகரிகம் கொண்ட மண் தமிழ்நாடு என்பதற்கு தொல்லியல் சான்றுகள் உள்ளன; 1990ல் கடல்சார் ஆய்வுக்கு பெரும் திட்டம் தீட்டியதும், பூம்புகாரில் கடலுக்கு அடியில் சில கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டதும் கலைஞரால்தான். வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை அமைத்தது, தமிழ் வாழ்க என எழுத வைத்தது, தமிழ் வழிபாட்டு உரிமை வழங்கியது, தமிழை கணினி மொழியாக்கியது, உலகம் முழுவதும் தமிழை பரப்பியது, செம்மொழி மாநாடு நடத்தியது என தமிழ் அரசை நடத்தியதுதான் திமுக அரசு.

கொற்கை, சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த, நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும். தற்போது தாமிரபரணியாக உள்ள பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என்று அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்கல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது. தமிழ் நிலப்பரப்பில் இருந்து வரலாற்றை எழுத வேண்டும் என்பதை அறிவியல் வழி நின்று நிறுவுவதே திமுக அரசின் லட்சியம். 

தமிழர் பண்பாட்டின் வேர்களை தேடி இந்திய நாடெங்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள மாநிலம் பட்டணம், ஆந்திராவின் வேங்கி, கர்நாடகாவின் தலைக்காடு, ஒடிசாவின் பாலூர் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment