இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை; பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையின் அறிவிப்புகள்

தமிழகத்தில் உள்ள முக்கிய மாநில நெடுஞ்சாலைகளில் 3 இடங்களில் சாலை பயனாளர்களுக்காக ‘சாலையோர வசதி மையங்கள்’ அமைக்கப்படும் – சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ வேலு அறிவிப்பு

ev velu
அமைச்சர் எ.வ வேலு சட்டப்பேரவையில் உரையாற்றியபோது

இந்தியா – இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்றும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல்1) பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய பிறகு அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்: திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையே இணைப்பு பாலம்; சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள முக்கிய மாநில நெடுஞ்சாலைகளில் 3 இடங்களில் சாலை பயனாளர்களுக்காக ‘சாலையோர வசதி மையங்கள்’ அமைக்கப்படும். இதில், ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் ஓய்வறை, உணவகம், எரிபொருள் மையம், சாலை பாதுகாப்பு பூங்கா, விளையாட்டு அரங்கம், வாகனம் பழுது பார்க்கும் வசதி ஆகியவை இடம்பெறும்.

விபத்தில்லா மாநிலம் என்ற முதலமைச்சரின் கனவை செயல்படுத்த, பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய வேண்டியுள்ளது. இதற்காக கைப்பேசி செயலி (மொபைல் ஆப்) உருவாக்கப்படும். இதில் பொதுமக்கள் பதிவு செய்யும் சாலை பள்ளம் தொடர்பான புகைப்படங்கள் ஆய்வு செய்து, மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரத்திலும், மாவட்ட சாலைகளில் 72 மணி நேரத்திலும் பள்ளங்கள் சரி செய்யப்படும். சாலையில் உள்ள சீரற்ற தன்மை இணைய ஆய்வு வாகனம் (Net Survey Vehicle) மூலம் சோதனை செய்யப்படும். இந்த சோதனைகள் செய்த பிறகு தான் பணி நிறைவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

தமிழக முதல்வர் ரூ.37 கோடி நிதி ஒதுக்கீட்டில் குமரி கடல் பரப்பில் உள்ள திருவள்ளுவர் சிலை பாறைக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடற் பரப்பிற்கும் கண்ணாடி இழை பாலம் அமைக்க அனுமதி அளித்துள்ளார். விரைவில் இரண்டு பாறைகளுக்கு இடையே இருக்கும் கடல் நீர் பரப்பில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்படும்.

’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.1093 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 1 புறவழிச்சாலை, 23 சாலைகள் அகலப்படுத்துதல், 5 ஆற்றுப் பாலங்கள், 14 சிறுபாலங்கள், 9 இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும்.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் (CMRDP) கீழ், அடுத்த 10 ஆண்டுகளில் 2,200 கிமீ நான்கு வழித் தட சாலையாகவும், 6,700 கி.மீ 2 வழித்தட சாலையாகவும் அகலப்படுத்தப்படும். இந்த ஆண்டு 13.30 கி.மீ. நீள ஈரோடு வெளிவட்ட சுற்றுச் சாலை உள்ளிட்ட 200 கி.மீ சாலைகள் நான்கு வழித்தடமாகவும், 600 கி.மீ. சாலைகள் இருவழித்தடமாகவும் அகலப்படுத்தப்படும்.

ஆறு வழிச்சாலை மற்றும் அதிவேக சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மேற்கொள்ளப்படும் ’தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்’ அமைக்கப்படும். இதற்கான சட்ட முன் வடிவு தயார் செய்யப்படும்.

12,191 கிமீ நீள நெடுஞ்சாலைகளில் நில எல்லை அளவு (வழி விவரங்களின் உரிமை) மற்றும் மரங்கள், சாலை உபகரணங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் விவரங்கள் கணினிமயமாக்கப்படும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும். மேலும் மண் அரிப்பை தடுக்க பனை விதைகள் நடப்படும்.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் புதிதாக ரூ.215 கோடியில் ஆற்றுப் பாலங்கள் கட்டப்படும். 3 மாவட்டங்களில் ஆற்றுப் பாலங்கள் அமைக்க ரூ.29 கோடியில் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஆற்றுப் பாலங்கள் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

துறையூர், திருப்பத்தூர், நாமக்கல் ஆகிய 3 நகரங்களுக்கு ரூ.286 கோடியில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும். தருமபுரி, செந்துறை நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்க ரூ.36 கோடி மதிப்பில் நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னிமலை, கறம்பக்குடி, அபிராமம், போளூர், ஜெயங்கொண்டம், கள்ளக்குறிச்சி, வத்திராயிருப்பு, மல்லாங்கிணறு ஆகிய 8 நகரங்களுக்கு புறவழிச்சாலை அமைக்க ரூ.1.50 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

சாலை பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.150 கோடியில் சாலை பாதுகாப்பு பணிகள் நடைபெறுகின்றன. மலைப்பகுதிகளில் உள்ள வளைவுகளில் உருளை விபத்து தடுப்பான்கள் ரூ.100 கோடியில் அமைக்கப்படும்.

’அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து’ என்ற திட்டத்தின் கீழ் 29 மாவட்டங்களில் 200 தரைப்பாலங்கள் ரூ.300 கோடியில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும். கடன் உதவி பெற்று 20 மாவட்டங்களில் 73 தரைப்பாலங்கள் ரூ.487 கோடியில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும்.

இந்தியா – இலங்கை இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கப்படும். ராமேஸ்வரம் – தலைமன்னார், ராமேஸ்வரம் – காங்கேசன்துறை ஆகிய வழித்தடங்களில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu assembly highlights pwd highways departments announcements

Exit mobile version