சமூக நீதி நாள், நெசவாளர்களுக்கு 10% ஊதிய உயர்வு, வேலையாட்களுக்கு இருக்கை; சட்டப்பேரவை ஹைலைட்ஸ்

Tamilnadu assembly highlights social justice day, chair for employees: சமூக நீதி நாள், நெசவாளர்களுக்கு 10% ஊதிய உயர்வு, வேலையாட்களுக்கு இருக்கை; சட்டப்பேரவையில் இன்றைய முக்கிய அறிவிப்புகள்

Tamil Nadu budget 2021

தமிழக சட்டப்பேரவையில் இன்று, கைத்தறித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

சமூக நீதி நாள்

பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி  ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 95 வயது வரை போராடியவர் பெரியார். பெரியார் நடத்திய போராட்டங்கள் யாரும் காப்பி அடிக்க முடியாத போராட்டங்கள். பெரியார் நடத்திய போராட்டங்களை சொல்லத் தொடங்கினால் பேரவையில் 10 நாள் பேச வேண்டும். மேலும் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி, ஆண்டு தோறும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று கூறினார்.

கைத்தறித்துறை அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்…

கைத்தறி நெசவாளர்களுக்கு 10% ஊதியம் உயர்வு

கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 10% மற்றும் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும்.

கதர், பாலிஸ்திரா ரகங்கள் குறித்து மக்கள் அறிந்துக்கொள்வதற்கு ரூ. 20 லட்சம் செலவில் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும்.

திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் ரூ.6 கோடியில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ரூ. 5 கோடி மதிப்பில் கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் குறித்த கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

நெசவாளர்களின் நலவாழ்விற்காக ஆரோக்கிய நெசவாளர் நலவாழ்வு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும்.

மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம்

ஒன்றிய அமைச்சகத்தின் ஜவுளித்துறையின் கீழ் செயல்படும் அபிவிருந்தி ஆணையம் (கைவினைப்பொருட்கள்) சார்பில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் என்ற திட்டத்தை ரூ.5.61 கோடி செலவில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்  வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) மூலம் அப்பகுதியிலுள்ள கைவினைஞர்கள் நலனுக்காகவும், சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்படும்.

மேலும் மாமல்லபுரத்தை சுற்றியுள்ள கற்சிற்ப உற்பத்தி நிலையங்களை புதுப்பித்து, அங்கு வேலைபுரியும் கைவினைஞர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். இதனால் அங்கு வருகைதரக்கூடிய சுற்றுலா பயணிகளிடம் கற்சிற்ப உற்பத்தியாளர்கள் வணிகம் செய்திட இத்திட்டம் வழிவகை செய்யும். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாமல்லபுரம் நுழைவாயில் பகுதியில் 40 அடி உயரத்தில் ஸ்தூபி ஒன்றும் அமைக்கப்படும்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் சி.வி.கணேசன், வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு…

வேலையாட்களுக்கு இருக்கை வழங்கும் சட்டத்திருத்தம்

மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்பதால் பல்வேறு உடல்நலக்கேடுகளுக்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்க வேண்டும் என்றே கருதுகிறது.

மாநில தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்குவது தொடர்பான ஆலோசனை முன் வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களால் ஒத்த கருத்துடன் இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது. எனவே இந்த அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. என அமைச்சர் அறிவித்தார்.

பத்திரப்பதிவுத்துறை அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்புகள்…

கடந்த காலங்களில் நடந்த பதிவு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும்.

பதிவுத்துறை தொடர்பாக திங்கட்கிழமை தோறும் பதிவு குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly highlights social justice day chair for employees

Next Story
ஓபிஎஸ் உடன் சசிகலா – தினகரன் சந்திப்பு; அதிமுகவில் மீண்டும் எழுந்த சலசலப்புSasikala and Dhinakaran separately meets Panneerselvam, ops, சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், அதிமுக, சசிகலா ஓபிஎஸ் சந்திப்பு, இபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், sasikala, ttv dhinakaran, Churning in AIADMK, eps
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express