ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் ஒசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தார்.
சட்டப்பேரவையின் 110 விதியின் அறிவிப்புகள் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
“திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வருகிறது. அதில் மிக முக்கியமானது பெருந்தொழில்கள். தமிழ்நாட்டை நோக்கிப் பல்வேறு நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருந்து தொழில் தொடங்குவதற்கு வந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த தொழில் நிறுவனங்கள் மூலமாகத் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி அடைகிறது என்பது மட்டுமல்ல. தமிழ்நாட்டின் இளைய சக்தியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மோட்டார் வாகனங்கள், மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது.
தமிழ்நாட்டினை 2030-ம் ஆண்டிற்குள் 'ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக' உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், ஓசூர் நகரத்திற்கான ஒரு புதிய பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு, அது முடிவடையும் தருவாயில் உள்ளது.
ஓசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது. ஒசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்’ என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“