சட்டமன்றத்தில் பிப்.12-ல் ஜெ. படத்தை சபாநாயகர் திறக்கிறார் : ‘டிமிக்கி’ கொடுத்த மோடி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிப்ரவரி 12-ம் தேதி ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைக்கிறார். மோடி இந்த நிகழ்வை தவிர்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிப்ரவரி 12-ம் தேதி ஜெயலலிதா உருவப் படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைக்கிறார். மோடி இந்த நிகழ்வை தவிர்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர்கள் படங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் மறைந்த ஜெயலலிதாவின் படமும் வைக்கப்பட வேண்டும். இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணையும் முன்பே சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

அதேபோல எடப்பாடி பழனிசாமி தரப்பு தனியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனியாகவும் சென்னையில் ஜனவரி மாதம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்த இருப்பதாகவும், அதற்கும் மோடி வருகை தர வேண்டும் என அப்போது கோரிக்கை வைக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க மோடி வரக்கூடாது என டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் அப்போதே எதிர்ப்புக் குரலும் கொடுத்தனர்.

ஆனால் மத்திய அரசு தரப்பிலோ, பாஜக தரப்பிலோ இது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தச் சூழலில் இன்று சட்டப் பேரவை செயலாளர் பூபதி வெளியிட்ட அறிவிப்பில், ‘பிப்ரவரி 12-ம் தேதி சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் சபாநாயகர் தனபால் திறந்து வைப்பார்’ என அறிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடியின் ஒப்புதலுக்காகவே சுமார் ஒரு வருடம் ஜெயலலிதா படத்தை திறக்காமல், அரசுத் தரப்பில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது சபாநாயகர் மூலமாக திறப்பதன் மூலமாக, மோடி இந்த நிகழ்வை தவிர்த்துவிட்டது தெரிய வந்திருக்கிறது.

அதேபோல தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெற இருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தேதியும் மோடியின் ஒப்புதலுக்காகவே இன்னும் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கும் மோடி ஒப்புதல் கொடுப்பாரா? என்பது சந்தேகம்தான் என்கிறார்கள், பாஜக வட்டாரத்தில்!

‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மூலமாக இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியையும், இவர்களின் சாதுர்யமின்மையையும் மோடி புரிந்து கொண்டார். இவர்களுடன் நெருக்கம் காட்டுவது, பாஜக.வுக்கு இன்னமும் பின்னடைவையே உருவாக்கும் என்பதை தெரிந்து கொண்டே இடைவெளியை ஏற்படுத்துகிறார் மோடி’ என்கிறார்கள், பாஜக நிர்வாகிகள்!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close