scorecardresearch

அனைத்து அரசு பணிகளும் தமிழர்களுக்கே… அதிமுகவுக்கு முதல்வர் நன்றி… சட்டசபை ஹைலைட்ஸ்

Tamilnadu Updates : எதிர்கால தமிழகம் எல்லா வகையிலும் உயர்வடைய நாம் உறுதியேற்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tamilnadu Assembly Highlights Update : தமிழக சட்டசபையில், 2022-ம் ஆண்டுக்காக முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் சட்டசபை கூட்டத்தில், பல்கலை கழக துணைவேந்தர் நியமனம், அம்மா கிளீனிக் மூடல், நீட் விவகாரம், இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதனைதயடுத்து 3-வது மற்றும் கடைசி நாள் சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது.  

இந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அனைத்து அரசு பணிகளும் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் அரசு உத்தரவு பொருந்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கால்துறையை ஏவல்துறையாக மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நினைவு கூர்ந்து இந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி வாயிலாக தெரிந்துகொண்டதாக கூறியது யார் என்று கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவினரே தவறு செய்தாலும் அண்ணா மீது ஆணையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 5,274 பேர் பயன்பெற்றுள்ளனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு்ளளார். கடந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும்,  தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம் என்றும், மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்த பின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள முதல்வர் தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்,? அண்ணா நூலகத்தை பாழ்படுத்தியது யார்? செம்மொழி பூங்காவில் கருணாநிதி பெயரை மறைத்தது யார்? பாடத்திட்டத்தில் கருணாநிதியின் செம்மொழி பாடலை காதிகதம் ஒட்டி மறைந்தது யார் என்று ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

மேலும் தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்.  ஜெயலலிதா நினைவிடம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுமா? என்று எம்எல்ஏ.மு.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மருத்தவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து நீ்ட் தேர்வு விலக்குக்கு ஆதரவளிக்கும் அதிமுகவுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பிலும் மனமார்ந்த நன்றி என்றும் எதிர்கால தமிழகம் எல்லா வகையிலும் உயர்வடைய நாம் உறுதியேற்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்வதற்கான சட்டமுன்வடிவு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். ஆனால் கூட்டுறவு சங்கங்கள் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு பேசிய ஐ.பெரியசாமி சட்டசபையின் 110 விதியின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படும் என்றும், சேலம், நாமக்கல்லில் ரூ501.63 கோடி அளவில் பயிர்கடன் வழங்கப்படும் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க இயலாத சூழல் உள்ளது என்று கூறிய அமைச்சர் சக்கரபாணி மத்திய அரசு மண்ணெண்ணெய் விநியோகத்தை குறைத்து விட்ட நிலையில் கூடுதலாக பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி கூலி ரூ.500ஆக உயர்த்த அரசு முன்வருமா? என்று பொன்.ஜெயசீலன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளத்த அமைச்சர் ராமச்சந்திரன். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி கூலி ரூ.500ஆக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

நாகை, சாமந்தான்பேட்டை பகுதியில் தூண்டில் வளைவுடன் கூடிய சிறு மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தொடர்ந்து சட்டப்பேரவையில், சென்னை மாநகர காவல் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதனையடுத்து சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு திமுகவுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும், ஓபிசி இட ஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல் என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆதிக்க சக்திகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைத்து வந்த அநீதி துடைத்தெறியப்பட்டுள்ளது. 10% இடஒதுக்கீடு போராட்டத்திலும், அநீதியை முறியடித்து வெல்வோம் என்று குறிப்பிட்ட நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்ததுடன் சட்டசபை கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu assembly meeting 3rd day update in tamil