தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யக்கோரி அரசின் சார்பில் ஆளுனருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், உதயநிதி துணை முதல்வராகவும், சில அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் மற்றும் 3 பேர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆளுனர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய கோரி ஆளுனருக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். நாளை மதியம் 3 மணியளவில், ஆளுனர் ஆர்,என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: துணை முதல்வராக உதயநிதி நியமனம்; 3 அமைச்சர்கள் நீக்கம்: ஆளுனர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு
அதேபோல் கடந்த ஆண்டு, பண மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார். இதில் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மாற்றம் செய்யப்பட்டு, வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சராக இருந்த சிவா வி மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ், மனிதவள மேலான்மைத்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராக இருந்த மதிவானன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பால் மற்றும் பால் வளர்ச்சி மற்றும் காதி அமைச்சராகவும், நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.எம்.நாசர், செந்தில் பாலாஜி, புதிதாக ஆர்.ராஜேந்திரன், கோ.வி.செழியன் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்க உள்ளதாக முதல்வர் பரிந்துரை செய்துள்ள நிலையில், அவர்களின் இலாகா குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“