Advertisment

CUET; மத்திய பல்கலை-களில் நுழைவுத்தேர்வு நடத்த எதிர்ப்பு; சட்டசபையில் தீர்மானம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த எதிர்ப்பு; தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

author-image
WebDesk
New Update
CUET; மத்திய பல்கலை-களில் நுழைவுத்தேர்வு நடத்த எதிர்ப்பு; சட்டசபையில் தீர்மானம்

Tamilnadu assembly passes resolution against CUET exam: பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET) நடத்தும் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இதற்கான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். இந்தத் தீர்மானத்திற்கு பாஜகவைத் தவிர, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாமக, திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இளங்கலைப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு குறித்த தீர்மானத்தின் முன்னுரையாக நான் ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

மாநிலத்தின் கல்வி உரிமை மீது மத்திய அரசின் தாக்குதல் தொடர்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு ‘பொது நுழைவுத் தேர்வு’ என்று அறிவித்து, வருகின்ற 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறது.

இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள்கூட இளங்கலைப் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ’பீடிகை’ போட்டு, ஓர் அறிவிப்பினை மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. அதனை எதிர்த்து இந்த மாமன்றத்தில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

"மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு, 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல், அம்மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (National Testing Agency-NTA) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Examination-CUET) மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத் திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்று இந்தப் பேரவை கருதுகிறது.

பெரும்பாலான மாநிலங்களில், மொத்த மாணவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் மாநிலப் பாடத் திட்டங்களில் பயின்று வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்களாவர். எனவே, NCERT பாடத் திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்குத் தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு, இந்தச் சூழ்நிலை நம் நாட்டிலுள்ள பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும் என்றும் இந்தப் பேரவை கருதுகிறது.

இதையும் படியுங்கள்: சட்டவிரோதமாக மணல் அள்ளிய வழக்கு; முன்னாள் கனிமவளத் துறை உதவி இயக்குனர் கைது

இந்நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை. மேலும், மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்திருக்கிறது. இவ்வாறு ஒரு நுழைவுத் தேர்வினைச் செயல்முறைக்கு கொண்டு வருவதால், பள்ளிக் கல்வியோடு பயிற்சி மையங்களையும் நாடும் இளைய மாணவ சமுதாயத்தினர் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

எனவே, மாநில அரசுகளின் உரிமையினை நிலைநாட்டும் பொருட்டு, மத்தியப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட மத்திய அரசினை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது" எனும் தீர்மானத்தை நான் மொழிகிறேன். என்று முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்திற்கு பாஜக உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் நைனார் நாகேந்திரன் கூறுகையில், “கேரள காசர்கோடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கூட போராட்டம் நடத்தப்படவில்லை. மாணவர்கள் ஐஐடி மற்றும் ஐஐஎம் சேர்வதற்கான கூட்டு நுழைவுத் தேர்வுகளை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகின்றனர். இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார். பின்னர் நயினார் நாகேந்திரன் மற்ற பாஜக உறுப்பினர்களுடன் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இருப்பினும், பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் பேரவையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Stalin Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment