சட்டப் பேரவை சிறப்பு செயலர் நியமனத்தை எதிர்த்த வழக்கில் ஆளுநர் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை செயலாளராக உள்ள பூபதி பிப்ரவரி 28-ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், சபாநாயகரின் தனி செயலாளராக உள்ள சீனிவாசன் என்பரை பேரவையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நியமன உத்தரவு என்பது ரகசியமாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பணி மூப்பின் அடிப்படையில் தங்களை பரிசீலிக்காமல் நியமனம் நடைபெற்றுள்ளதால் அந்த நியமனத்துக்கு தடை விதிக்ககோரி சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் வசந்திமலர், இணைச் செயலாளர் சுப்பிரமணியம் ஆகிய இருவர் சார்பில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக ஆஜரான முத்த வழக்கறிஞர் வில்சன், பேரவையின் செயலாளராக இருந்த பூபதி கடந்த மாதம் 28 ஆம் தேதியுடன் ஒய்வு பெற்றார். இந்நிலையில் விதிகளை மீறி சீனிவாசன் என்பவரை சிறப்பு செயலர் என்கிற புதிய பதவியில் நியமித்து அவரை பேரைவையின் செயலராக நியமிக்க உள்ளனர். சீனிவாசனுக்கு பேரவையின் நிர்வாக பிரிவில் முன் அனுபவம் இல்லாததால் அவரை பேரவை செயலராக நியமிக்க கூடாது என்றும் அவரை தேர்வு செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் வாதாடினார்.
சட்டப்பேரவை செயலாளர் சார்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், பேரவை செயலர் பதவி என்பது மிக முக்கியமானது. புதிய பேரவை செயலரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் முடிவு பெறவில்லை என்றும் அந்த பதவிக்கான நியமனத்திற்கு தடை விதிக்க கூடாது என வாதிட்டார்.
இதனையடுத்து அரசு தரப்பு வாதம் முடிவடையாததால் வழக்கை மார்ச் 6 ஆம் தேதிக்கு நீதிபதி ராஜா தள்ளிவைத்தார். அடுத்த விசாரணையின் போது பேரவை செயலர், ஆளுனர் செயலர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.