Advertisment

3-வது அலை... மருத்துவமனைகளில் 1 லட்சம் குழந்தைகள் படுக்கை அவசியம்: சட்டமன்ற ஹைலைட்ஸ்

Tamilnadu assembly session today highlights govt ready for corona 3 wave: தமிழக சட்டசபை துளிகள்; கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள அரசு தயார்; ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை

author-image
WebDesk
New Update
3-வது அலை... மருத்துவமனைகளில் 1 லட்சம் குழந்தைகள் படுக்கை அவசியம்: சட்டமன்ற ஹைலைட்ஸ்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், புதிய சட்டசபையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

Advertisment

கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றும்போது சில வார்த்தைகள் தமிழில் பேசினார். “காலை வணக்கம். எளிமையான வாழ்க்கை வாழுங்கள். அது ஊழலை அகற்றிவிடும். இது எனது செய்தி. தமிழ் இனிமையான மொழி” என்றார். அதனையடுத்து அவரது உரையில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும், உழவர் சந்தைக்கு புத்துயிர் அளிக்கப்படும், அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றன.  இதனையடுத்து நடந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடரை வரும் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இன்று, தமிழக சட்டசபை கூட்டத் தொடரின், 2 வது நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு  சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார். மேலும், சின்ன கலைவாணர் நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா, இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் கவுண்டர் ஆகியோர் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அடுத்ததாக, அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகத்தின் பொறுப்புடமை சட்ட முன்வடிவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து, சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து திமுக எம்எல்ஏ உதயசூரியன் பேசினார். அப்போது அவர் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள், தற்போது வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஆகியவை குறித்து அவர் பேசினார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நலத்திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை எனவும், ஊரடங்கை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறிய அவர், இந்த ஆட்சியில் சொன்னபடியே ரூ.4,000 நிவாரணம் வழங்கியதோடு ஊரடங்கும் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

இதையடுத்து பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய அதிமுக எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர், ஆளுநர்  உரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை முக்கியமாக பார்க்கிறேன். அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும். பொது போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் அரசு இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என பேசினார்.

மேலும், "நாடு விரைவில் கொரோனாவின் மூன்றாவது அலைகளை எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது மேலும் அதிர்ச்சியூட்டும் செய்தி. 18 வயதுக்குக் குறைவான 1.71 கோடி பேரில் 10 சதவீத குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இது 20 லட்சத்திற்கு அருகில் இருக்கும். அவர்களில் குறைந்தது 10 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள், இது 2 லட்சமாக இருக்கும். 2 லட்சம் படுக்கைகள் இல்லாவிட்டாலும், மாநில அரசு குறைந்தபட்சம் 1 லட்சம் குழந்தை படுக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும், குழந்தைகளுக்காக பெற்றோர்களும் அவர்களுடன் செல்ல வேண்டும், எனவே கூடுதலாக 1 லட்சம் படுக்கைகள் நிறுவப்பட வேண்டும் "என்று விஜயபாஸ்கர் சட்டசபையில் கூறினார்.

மேலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பிந்தைய சிக்கல்கள் அதிகரித்துள்ளன,  மக்கள் கண்கள், பற்கள், ஆஸ்டியோமைலிடிஸ், மாரடைப்பு, நுரையீரல் மற்றும் பிற இதய பிரச்சினைகள் ஆகியவற்றை சந்தித்து வருவதாகவும் விஜயபாஸ்கர் கூறினார். எனவே, புற்றுநோய், கொரோனா சிகிச்சை மருத்துவமனைகள் மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய நோய்களுக்கு சிகிச்சையளிக்க கொரோனா அல்லாத மருத்துவமனைகள் என மூன்று வகையான மருத்துவமனைகளை மாநில அரசு அமைக்க வேண்டும். என்று கூறினார்.

மேலும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இன்னும் குழப்பத்தில் இருப்பதால், நீட் தேர்வை நீக்குவதற்கான தேர்தல் வாக்குறுதி இந்த ஆண்டு செயல்படுத்தப்படுமா என்று விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

விஜயபாஸ்கருக்கு பதிலளித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பேசியபோது, ​​கொரோனாவின் மூன்றாவது அலைகளை எதிர்கொள்ள மாநில அரசு முழுமையாக தயாராக உள்ளது, ஏனெனில் முதலமைச்சர் கொரோனாவின் மூன்றாவது அலைகளை கையாள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் என்றார்.

மேலும், ஜூன் மாதத்தில் 42 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் 71 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2 கோடி தடுப்பூசிகளை ஒதுக்குமாறு முதலமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார் என்றும் கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது உரையை நிறைவு செய்த பின்னர், திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான கொரோனா வார்டு திறக்கப்பட்டதை சபாநாயகர் அப்பாவு நினைவு கூர்ந்தார், மேலும் சபையின் உறுப்பினர்கள் அதை அறிந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இருப்பினும், நீட் தேர்வு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளிக்கவில்லை.

ஹைட்ரோகார்பன் பிரச்சனை

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து பேசினார்.

அதற்கு, பதிலளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஹைட்ரோகார்பன் புதிய ஆய்வுக்காக மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்தது எனவும், அந்த விண்ணப்பம், கடந்த சில நாட்களுக்கு முன் நிராகரிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

மேலும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன்  எடுக்க அனுமதியில்லை எனவும், இந்த மாவட்டஙக்ளுக்கு வெளியே எண்ணெய் கிணறுகள் அமைக்க விண்ணப்பித்தால், அதன் பாதிப்புகள் குறித்து கண்டறிய வல்லுநர் குழு அமைக்கப்படும் எனவும், அக்குழு பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மேலும், தமிழகத்தில் மீத்தேன், ஷேல் எரிவாயு எடுக்க அனுமதியில்லை என கூறிய அவர், இதுபோன்று மண் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக, தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை சமப்பிக்க குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்

வேளாண் சட்டங்கள் குறித்து தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் போது, வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் அதனை எதிர்த்து வருகிறோம். கவர்னர்  உரை மீதான விவாதம் நடைபெற்று வருவதால் தற்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது சரியாக இருக்காது.

எனவே, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும். தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்ட்டு உள்ளது என்று கூறினார்.

அடுத்ததாக, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானமும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என முதலவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Vijayabaskar Stalin Tamilnadu Assembly Ma Subramanian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment