தமிழக சட்டப்பேரவை பத்து நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. இன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தில் செய்தி மற்றும் சுற்றுலா மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றம் LIVE UPDATES:
1:00 PM: சட்டப் பேரவையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் 1,500 மருத்துவர்கள், 4,000 செவிலியர்கள் விரைவில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள்’ என்றார்.
12:45 PM: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘சேலம் சங்ககிரியில் விசைத்தறி பூங்கா அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது’ என்றார்.
12:30 PM: வேளச்சேரி எம்.எல்.ஏ.வான நடிகர் வாகை சந்திரசேகர் பேசுகையில், ‘திரைப்படங்கள் வெளியான அன்றே இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. சினிமா துறை அழிவுக்கு காரணமானவர்கள் தமிழ் ராக்கர்ஸ். தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் யாருடையது? இயக்குபவர் யார்?’ என கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு சட்டமன்றம்: வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் பேட்டி
12:00 PM : சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஆளுநர் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபடுவார் என்றால் கருப்புக்கொடி போராட்டம் தொடரும். மாநில சுயாட்சிக் கொள்கைக்காக 7 ஆண்டு அல்ல, ஆயுள் முழுக்க சிறையில் இருக்கத் தயார்’ என்றார்.
11:20 AM : சட்டப்பேரவையில் விதி 92(7) இன் கீழ் ஆளுநர் குறித்து பேச அனுமதி இல்லை என சபாநாயகர் தனபால் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வெளியில் வந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றம்: வெளிநடப்பு செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
11:15 AM: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை என குறிப்பிட்டு பேசினார். ‘கடந்த காலங்களில் தமிழகத்தில் திமுக, அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோது ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை.’ எனக் கூறிய ஸ்டாலின் சில மரபுகளை சுட்டிக்காட்டி அவையில் ஆளுநர் ஆய்வை விவாதிக்க வேண்டும் எனக் கேட்டார்.
11:00 AM: பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சுகாதாரத்துறையில் அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. செங்கல்பட்டில் ரூ.60 கோடியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
ரூ.82 கோடியில் 985 சுகாதார மையங்கள் ஒருங்கிணைந்த சுகாதார மையங்களாக தரம் உயர்த்தப்படும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ.55.5 கோடியில் கூடுதலாக 3 தளங்கள் கட்டப்படும், ரூ.42 கோடி மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 தளங்கள் கூடுதலாக கட்டப்படும் ஆகிய அறிவிப்புகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
10:30 AM: திமுக எம்எல்ஏ ராமசந்திரன் பேசுகையில், ‘எம்எல்ஏக்களுக்கான புத்தகங்கள் கனமாக இருப்பதால் கொண்டுசெல்ல முடியவில்லை; புத்தகம் கனமாக உள்ளதால் காகிதத்திற்கு மாற்றுப் பொருள் வேண்டும்’ என்றார். அதற்கு சபாநாயகர் தனபால், ‘எம்எல்ஏக்களுக்கு தரப்படும் புத்தகங்கள் கனமாக இருப்பதால் மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது’ என பதிலளித்தார்.
10:10 AM: 10 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சட்டப்பேரவைக் கூட்டம் மீண்டும் தொடங்கியது. முன்னாள் எம்.எல்.ஏ வேதாசலம் மறைவுக்கு பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது
9:30 AM : 2018-19 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் கடந்த மார்ச் 15 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மே 29 ஆம் தேதி சட்டப்பேரவை கூடியது. அதில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. 13 நாட்கள் நடைபெற்ற இந்தச் சட்டப்பேரவை கூட்டம், இறுதியாக ஜூன் 14 ஆம் தேதி நிறைவடைந்தது. இறுதி கூட்டத்தில் சுகாதாரத்துறை மானிய கோரிக்கைக் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்பு பேரவைக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 10 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை. விடுமுறைக்குப் பின்பு இன்று நடைபெறும் கூட்டத்தில், செய்தி விளம்பரத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்பை முன்வைக்க உள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.