புதிய ஆண்டில் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப் பேரவை கூட்டம் தொடங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு இன்று அறிவித்தார். இது தொடர்பாகச் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழகச் சட்டமன்ற பேரவையில் வருகிற ஜனவரி மாதம் 6 ஆம் தேதி சட்டப் பேரவை கூட்டம் கூடும்.
அன்றைய தினம் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி காலை 9.30 மணியளவில், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 174 உட்பிரிவு 1-ன் கீழ் உரையாற்றுவார். உரையை ஆளுநர் முழுமையாக படிப்பார் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்தாண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் குறைந்த நாட்கள் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அப்பாவு, 2024 நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் அதிக நாட்கள் கூட்டத்தொடர் நடத்த முடியவில்லை. எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய அந்தஸ்து மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக 2011 முதல் 2021 வரையிலான குளிர்கால கூட்டத்தொடர் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் தற்போது அனைத்தும் மசோதாக்களும் கூடுதல் நேரம் ஏற்பட்டாலும் விவாதம் நடத்தி நிறைவேற்ற முதல்வர் கூறியுள்ளார். அது மட்டுமின்றி இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் அறிவித்த பின்னர் சட்டமன்றத்தை நடத்த முடியாது.
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், கடந்த ஆண்டு டிசம்பரில் வெள்ள பாதிப்பாலும் அரசு இயந்திரம் களத்தில் செயல்பட்டதால் அதிக நாட்கள் சட்டமன்ற கூட்டத் தொடரை நடத்த முடியவில்லை” என விளக்கமளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“