பஞ்சாபின் தீவிரவாதிகளை உயிருடன் பிடித்த தமிழரான பி.தினேஷ்குமாருக்கு உபி அரசு பாராட்டுப் பதக்கம், விருது அளித்துள்ளது. பாஜக ஆளும் உபியில் இந்த விருதைப் பெறும் இரண்டாவது தமிழர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் சிறப்பாக பணிபுரியும் காவல்துறையினரை பாராட்டி குடியரசு தலைவர் விருது வழங்கப்படுகிறது. இதுபோல், குடியரசு தினத்தன்று உபி அரசு சார்பில் 2005 முதல் டிஜிபி விருதுகள் வழங்கப்படுகின்றன.
சர்வதேச தீவிரவாதிகளான காலீஸ்தான் அமைப்பினர் மூவர் கடந்த அக்டோபர் 15-ம் தேதி ஷாம்லியில் பிடிபட்டனர். அப்போது, அம்மாவட்ட எஸ்எஸ்பியான தினேஷ் அவர்களுடன் துப்பாக்கி மோதல் நடத்தி பிடித்தார்.
இந்த மூவரும் பஞ்சாபின் முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், அவரது மகனும் துணை முதல்வருமாக இருந்த சுக்பீர்சிங் பாதலை கொல்லத் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக உபியின் ஐபிஎஸ் அதிகாரியான தினேஷ்குமாருக்கு அம்மாநில அரசு சார்பில் பாராட்டுப் பதக்கம், விருது அளிக்கப்பட்டுள்ளது. நேற்று சஹரான்பூரில் நடைபெற்ற குடுயரசு தின விழாவில், இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து தினேஷ்குமார் கூறுகையில், "இதுபோன்ற பாராட்டும் விருதுகளும் காவல்துறை தொடர்ந்து சாதிக்கத் தூண்டும். நான் பணியாற்றும் உபி மாநில அரசால் அளிக்கப்பட்ட விருது தமிழனுக்கும் பெருமை அளிக்கக் கூடியது. அந்த தீவிரவாதிகளை பிடித்தபோது என்னுடன் பணியாற்றிய படையினருக்கும் இந்த பாராட்டும் சேரும்" எனத் தெரிவித்தார்.
மேட்டூரின் சின்னதண்டா கிராமத்தின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்த தினேஷ்குமார், 2009 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் பட்டதாரி. இதே பல்கலைகழகத்தில் பயின்ற தமிழரான ஜி.முனிராஜும் கடந்த வருடம் இந்த விருதை பெற்றிருந்தார்.
உபியில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளில் 8 பேர் தமிழர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் உபியின் பதட்டமான மற்றும் கிரிமினல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் உபி முதல் அமைச்சரான யோகி அதித்யநாத் தனிக்கவனம் எடுத்து பணியமர்த்தி உள்ளார்.