/indian-express-tamil/media/media_files/2025/06/09/dW0aboUSrBwspFg7p9EF.jpg)
இந்து மதத்தில் பெரிய ஒற்றுமை வராது என்ற தைரியத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இன்னும் பழைய அரசியலை செய்துகொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு சட்டம், இந்து அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் உள்ளது. இந்த மாநாடு ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை என்று தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. மதுரை பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் இன்று நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். சிறப்பு விருந்தினராக ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் கலந்துகொண்டுள்ளார்.
இந்த மாநாட்டில் பேசிய, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறுகையில், இது ஒரு சாதாரணமான ஒரு கூட்டம் இல்லை. ஒரு இனம் தன்னுடைய குரலை உறக்க சொல்கிறது. தங்களுடைய உரிமையை நிலைநாட்ட துடிக்கிறது. எங்கெல்லாம் சனாதன தர்மத்துக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் அங்கே நான் இருப்பேன் என்று சொல்லி இது தான் நம் முதல் வேலை என்று இங்கு வந்திருக்கிறார் ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண். அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்து மதத்தில் பெரிய ஒற்றுமை வராது என்ற தைரியத்தில் இன்னும் அரசியல்வாதிகள் பழைய அரசியலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆன்மிக ஆட்சி தேவை. தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு சட்டம், இந்து அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் உள்ளது.கொள்கைக்காக 5 லட்சம் பேர் வந்துள்ளனர், இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை. ஒரு இனம் தன் நிலை மற்றும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று விரும்புகிறது.
மொத்த மக்கள் தொகையில் .2 விழுக்காடு இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வியலை தொந்தரவு செய்ததற்கக 4 நாடுகளுடன் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறது.
அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் இதற்காகத்தான் எங்களுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்வியலுக்கு ஏதாவது தொந்தரவு வந்தால், எதிர்த்து நிற்போம் என்று, இஸ்ரேல் நாடு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டால் சில மனிதர்களுக்கு பிரச்னை. இந்துக்களை பொருத்தவரை சிறிதாக எதாவது தொந்தரவு செய்தால் கண்டுகொள்ள மாட்டோம். பெரிதாக தொந்தரவு செய்தாலும் இதே நிலைதான்.
ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு முருக பக்தர்கள் மாநாடு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. முருகன் கோயில்களில் வழிபாட்டு விவகாரத்தில் தலையிட்டால் சூரசம்காரம் செய்து விடுவோம் என மாநாட்டு செய்தியாக சொல்கிறோம்.
120 நாடுகள் கிறிஸ்தவத்தை பின்பற்றுகிறது, 53 நாடுகள் இஸ்லாமியத்தை பின்பற்றுகிறது, 10 நாடுகள் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றுவதில்லை, 2 நாடுகள் மட்டுமே இந்து மதத்தை பின்பற்றுகிறது. இந்து மதத்தை பாதுகாக்க இந்து மக்களிடம் எழுச்சி ஏற்பட வேண்டும். தமிழ்நாட்டில் இந்துக்களுக்கும் இந்துக்களை சாராதவர்களுக்கும் தனித்தனி சட்டம் உள்ளது. 2026 தேர்தலில் மக்கள் நிதி வேண்டாம், சாமி வேண்டும் என முடிவு செய்து விட்டார்கள். இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அனைவரும் தட்டி கேட்க வேண்டும்.
கோயில்களை இந்து அறநிலையத்துறை ஒழுக்கமாக நடக்கவில்லை.
2055 ஆம் ஆண்டில் உலகில் இஸ்லாமிய மக்கள் அதிகம் இருக்க கூடியதாக இருக்கும். இந்துவிலிருந்து ஒருவர் கூட மாற்று மதத்திற்கு மாறக்கூடாது. மாற்று மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வர வேண்டும். தமிழ் மொழியில் ஆன்மீகமும் அறிவியலும் கலந்துள்ளது. 5,400 ஆண்டுகள் பழமையான தமிழ்நாட்டின் வாழ்க்கை முறை மாறாமல் தமிழர்களை அரசியல்வாதிகள் வாழ விட மாட்டார்கள். கோயில்களை சார்ந்து தமிழ் கலாச்சாரம் இருந்ததால் 5400 ஆண்டுகள் பழமையானதாக உள்ளது.
தமிழ் கடவுள் முருகன் பற்றி பல தகவல்கள் ஒளிந்து கிடக்கிறது. 540 ஆண்டுகள் பழமையானது தமிழகம் என்று சொல்கிறார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையை இந்த அரசியல்வாதிகள் வாழ விடுவார்களா என்ற கேள்வியும் உள்ளது. இது போன்ற மாநாடுகள் இன்னும் நடக்கும் நடந்துகொண்டே இருக்கும். நமது இனத்தின் அடையாளத்தை தைரியமாக வெட்டவெளியில் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. 2 நாடுகளில் மட்டும் பெரும்பான்மையாக இருந்தாலும் கூட நாம் யாருக்கும் எதிரி கிடையாது.
திருப்பரங்குன்றத்திற்கு அரசியல்வாதி ஒருவர் வருகிறார். இப்போது அவர் எம்.பியாக இருக்கிறார். ஒரு முக்கிய கட்சியின் தலைவர். அவர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வரும்போது ஒரு பெண் செல்பி கேட்கிறார். இவர் நெற்றியில் இருக்கும் விபூதியை அழித்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். இவர்கள் ஓட்டு பிச்சை எடுக்க 2026- தேர்தலில் நம்மை தேடி வருவார்கள் என்று அண்ணாமலை பேசியுள்ளார். இவர் வி.சி.க தலைவர் திருமாவளவனைத்தான் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.