பா.ஜ.க சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை தனக்கு ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தாக வெளியாகியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வரும் ஏப்ரல் 19-ந் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி, அதி.மு.க – தேமு.தி.க, மற்றும் பா.ஜ.க – பா.ம.க என 3 கூட்டணிகள் களமிறங்கியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
இதனிடையே பா.ஜ.க சார்பில், தமிழக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக கோவை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை தனக்கு ஆரத்தி எடுத்த பெண் ஒருவருக்கு பணம் கொடுத்ததாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்துவருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு, தேனியில் அ.தி.மு.க நிர்வாகி பெண்ணுக்கு பணம் கொடுத்ததாகவும், மற்றும் தி.மு.க நிர்வாகியும் பணம் கொடுத்தாகவும் வீடியோக்கள் வெளியாகி இருந்தது. அதேபோல் தேர்தல் பிரச்சாரத்தின்போது தனக்கு ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுக்க முயன்ற தனது நிர்வாகியை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்த வீடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஆரத்தி எடுத்ததற்கு அண்ணாமலை பணம் கொடுக்கும் வீடியோ வைராலான நிலையில் இது குறித்து சரிபார்க்க போலிசாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அவரது எக்ஸ் (X) வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
We have taken cognisance of the video shared. This is forwarded to the police team for verification. The enquiry is in progress. https://t.co/Pqf0AT3jUD
— District Collector, Coimbatore (@CollectorCbe) March 29, 2024
இது குறித்து பா.ஜ.க தேர்தல் தலைமை பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடக நண்பர்களுக்கு வணக்கம். தேசிய ஜனநாயக கூட்டணியின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், தமிழக பாஜக மாநில தலைவருமான திரு.அண்ணாமலை அவர்களுக்கு ஒரு பெண் ஆரத்தி எடுக்கும் போது, அவர் பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இப்போது பொதுவெளியில் அரசியல் உள்நோக்கத்தோடு பகிரப்படும் இந்த வீடியோ சரியாக எட்டுமாதம் முன்பாக ஜூலை 2023, காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. என் மண் என் மக்கள் யாத்திரையை ஒட்டிய நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திரு.அண்ணாமலை அவர்களுக்கு அன்போடு ஆரத்தி எடுத்த ஒரு சகோதரிக்கு, பதில் மரியாதையாக கொடுக்கப்பட்ட பணத்தினை கூட வைத்து இப்படி அரசியல் செய்ய முடியுமென நினைக்கிறார்கள் சிலர். தமிழ்நாட்டு மண்ணில் ஆரத்தி எடுப்பதும், ஆரத்தி எடுப்பவர்க்கு அன்பாக ஆரத்தி காசு கொடுப்பதும் காலம் காலமாக வழங்கி வரும் வழக்கம்.
ஆனால் இது தேர்தல் காலம். ஆரத்தி எடுத்தாலும் பணம் கொடுக்க கூடாது, அதை மீறி கொடுத்தால் அது வாக்குக்கு கொடுக்கப்பட்ட லஞ்சமாகவே கருதப்படும் என்பதை எல்லோரும் அறிவர்.
எனவே இந்த வீடியோவுக்கும் தற்போதைய பாராளுமன்ற தேர்தலுக்கும், இப்போது நடந்து வரும் பிரச்சாரத்திற்கும் துளியும் தொடர்பு இல்லை. இந்த தவறான செய்தியை பரப்புவோரின் உள்நோக்கத்தை கண்டறிந்து தேர்தல் நடத்தும் அலுவலர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவன்போடு ஊடகங்களின் வாயிலாக வேண்டுகிறோம்!
ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும் 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 1085 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.