பெரியார் சிலை மற்றும் தி.மு.க எம்.பி கனிமொழிக்கு எதிரான ட்விட்கள் தொடர்பான வழக்கில், தலா 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றுள்ள பா.ஜ.க. தமிழக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, திராவிட கட்சிகளுக்கு எதிரான எது சண்டை தொடரும் என்று கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என்று கூறியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. எம்.பி கனிமொழி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்டதற்காக அவர் மீத மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல், வழக்கை 3 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயவேல் முன்னிலையில் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையெ இன்று வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜி.ஜெயவேல், எச்.ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரின் இரு பதிவுகளும் சமுகவதைளங்களில் வெளியிடப்பட்டது. எனவே இந்த வழக்கில் எச்.ராஜா குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு, அவருக்கு இரு வழக்கிலும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவசாகம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த எச்.ராஜா, இது அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை. மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அவகாசம் கொடுத்துள்ளது. அதன்படி மேல்முறையீடு செய்யப்படும். ஒரு பக்கம் வழக்கறிஞர்கள் சட்ட போராட்டத்தினை நடத்துவார்கள். திராவிட கட்சிகளுக்கு எதிரான எனது சண்டை தொடரும். 60 ஆண்டுகளாக ஒரு சித்தாந்தத்திற்காக போராடிக்கொண்டிருப்பவன். அந்த போராட்டத்திற்கு இடையில் என்ன பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும்.
என் மீதான வழக்குகளை சட்டப்படி அணுகுவேன். இதை அவதூறு என்று சொன்னார்கள். ஒருவர் இதை அவதூறு என்று நினைத்தால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து பார்க்க வேண்டும். இதில் அவதூறு என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“