பி.ரஹ்மான் கோவை
தி.மு.க எம்.பி ஆ.ராசாவை ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராசாமி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா இந்துக்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கோவையில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஆ.ராசாவை ஒருமையில் பேசி, மிரட்டல் விடுத்தார். மேலும் தமிழக முதல்வர், மற்றும் தந்தை பெரியாரை குறித்து அவதூறான பேசியது பரபரப்பானது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து இந்த பேச்சுக்கு எதிரான திமுக நிர்வாகி ஆனந்தகுமார் என்பவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் கலவரத்தை தூண்டுதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்த கோவை போலீசார் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று பாலாஜி உத்தம ராமசாமி சார்பில் மாவட்ட தலைமை அமர்வில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பாலாஜி உத்தம ராமசாமி 15 நாள் பீளமேடு போலீஸ் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமின் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து ஜாமினில் வெளிவந்த பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், சிறை எங்களை முடக்கி விடாது , இனியும் களப்பணி தீவிரமாக தொடரும். மேலும் 11 பேருக்கு ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெறுவோம் என கூறியுள்ளார்.
மேலும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் இதற்கு பொருந்தாது எனவும் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இது தொடர்பான கருத்துக்களை பேச முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil