கவர்னர் உரையில் பொய்யை எப்படி படிக்க முடியும் - எச்.ராஜா
தி.மு.க.,வினர் இந்த விவகாரத்தை இதோடு விட்டு விட்டால், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும். எனவே, கவர்னரை பற்றி யாரும் பேச வேண்டாம், என்று எச்சரிக்கிறேன்.
திருச்சி பாலக்கரை மண்டல் சார்பாக 30-வது வார்டு வி. எம் பேட்டையில் நம்ம ஊர் மோடி பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
Advertisment
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா கூறுகையில்,கடந்த மூன்று நாட்களாக பிரிவினைவாத தீய சக்திகள் வேண்டுமென்றே கவர்னர் மீதும் பா.ஜ.கவினர் மீதும் தாக்கிப் பேசி வருகின்றனர். மறைமுகமாக மத்திய அரசையும் தாக்கி பேசுகின்றனர். கடந்த 2019ல் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், எதிர்ப்பான சூழலை ஏற்படுத்தியது போல், இப்போதும் ஏற்படுத்துகின்றனர். தமிழக கவர்னரின் நடவடிக்கைகளில் உள்நோக்கமும் இல்லை. மாநில அரசை குறை கூறி, முதல்வருக்கும், அரசுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாமல், நாகரீகமாக கவர்னர் உரையில் எழுதியிருக்கும் வாசகங்களை தவிர்த்துள்ளார்.
இதற்கு முதல்வர் கவர்னருக்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். ஈ.வெ.ரா., அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் கொடுத்த உற்சாகத்தில், வெளிநாட்டு நேரடி முதலீட்டில் முதல் மாநிலமாக வந்திருப்பதாக கூறுவது பச்சை பொய். கடந்த ஆண்டு தமிழகத்துக்கு, 2.5 மில்லியன் டாலர் அந்நிய முதலீடு வந்துள்ளது. அதே சமயம், கர்நாடகாவுக்கு 18 மில்லியன் டாலர், மகாராஷ்டிராவில் 11.6 மில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
கவர்னர் உரையில் பொய்யை எப்படி படிக்க முடியும். கவர்னரின் நாகரீகத்தை பாராட்ட வேண்டும். கடந்த 7 ம் தேதியே, என்னால், பொய்யான புகழுரைகளை படிக்க முடியாது என்று சொல்லி உள்ளார். அப்போது, அரசு தரப்பில், கவர்னர் உரை அச்சுக்கு போய் விட்டதாக தெரிவித்துள்ளனர். ‘நீங்கள் தப்பு என்று நினைப்பதை தவிர்க்கலாம்,’ என்றும் தெரிவித்துள்ளனர்.
அதனால், மாநில அரசின் சம்மதத்தோடு தான், அந்த சம்பவம் நடந்துள்ளது. அதனால் தான் பிரச்னை பெரிதாவதை தடுக்க, தமிழக முதல்வர், தி.மு.க.,வினர் கவர்னரை பற்றி பேசக்கூடாது, என்று அறிவுறுத்தி உள்ளார். ஆனால், ஆர்.எஸ்.பாரதி போன்ற அநாகரீக பேர்வழிகளுக்கு, அரசியல் சட்டம் தெரிந்திருக்க வேண்டும். 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி தான், ஒரு மாநில அரசை கலைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பிட்ட பகுதியை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது.
ஏற்கனவே, அ.தி.மு.க.,வில் இருந்த போது, கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் கேவலமாக சட்டசபையில் பேசிவிட்டு, தற்போது, தி.மு.க.,வில் அமைச்சராக இருக்கும் சேகர் பாபுவை ஏவி விட்டால், என்னாகும், என்று கேட்கிறார் ஆர்.எஸ்.பாரதி. முதல்வர் பதவிக்கு உலை வைக்க முடிவு செய்து விட்டீர்கள். இப்போது, சேகர் பாபுவின் அரசியல் வாழ்க்கையையும் முடிக்க நினைத்து விட்டார்கள்.
தி.மு.க.,வினர் இந்த விவகாரத்தை இதோடு விட்டு விட்டால், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும். எனவே, கவர்னரை பற்றி யாரும் பேச வேண்டாம், என்று எச்சரிக்கிறேன். திமுகவினரின் தூண்டுதலால் தான், கவர்னருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சித்திரை தான் நமக்கு தமிழ் புத்தாண்டு. பொங்கல் பண்டிகை இந்துக்கள் பண்டிகை.
இது நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மஞ்சுவிரட்டு, ஏர் தழுவுதல் எல்லாம் நமது பாரம்பரிய விழாக்கள் என்றார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/