பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைப்பதை தடுக்கக் கோரி அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக பாஜகவில் தலைவர் அண்ணாமலைக்கு அடுத்து அனைத்து அரசியல் தலைவர்களையும் விமர்சிப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. பாஜகவின் இளைஞர் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராக இருக்கும் இவர், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராகவும், அவர் பற்றி விமர்சிக்கும் பலருக்கும் தனது விமர்சனங்களால் பதிலடி கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அமர் பிரசாத் ரெட்டியின் இந்த நடவடிக்கையின் காரணமாக தமிழக பாஜகவில் தனித்து அனைவருக்கும் பிரபலமான நபராக இருந்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் சென்னை பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்றியதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய நபராக அமர்பிரசாத் ரெட்டி கலந்துகொண்டார்.
இந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இவர் மீது, கொடிக்கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல், ஜெசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல்துறையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டது தொடர்பான பழைய வழக்குகளிலும் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தமிழக அரசின் விளம்பரங்களை கிழித்தது, அதே இடத்தில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியது தொடர்பாக வழக்கு உள்ளது. இதனிடையே அமர்பிரசாத் ரெட்டி மீது மோசடி வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறையினர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமர்பிரசாத் ரெட்டியின் மனைவி நிரோஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், ஆளும் கட்சியின் சட்டவிரோத போக்கை அம்பலப்படுத்தியதால், எனது கணவர் மீது பொய்வழக்கு பதிவு செய்து சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர். போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியதால், அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜூவிடம் சொல்லி தனது கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.