அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் அதிமுகவில் இபிஎஸ் – ஒபிஎஸ் இடையே நடந்து வந்த பதவி மோதல் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இபிஎஸ் பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் நீதிமனதற்தில் தாக்கல் செய்த அத்தனை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
இதன் மூலம் அதிமுகவின் உட்கட்சி பூசல் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் கூட்டணி கட்சியான பாஜகவுடன் அதிமுகவின் பனிப்போர் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததில் இருந்து இரு கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தோல்விக்கு காரணம் நீங்கள் தான் என்று மாறி மாறி குற்றம் சாட்டி வருகினறனர்.
இதன் காரணமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இரு தரப்பிலும் கூட்டணி குறித்து பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறி வருகின்றனர். அதேபோல் சமீபத்தில் திமுக தலைவர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கேட்ட கேள்விக்கு அவர் எல்லாம் எனக்கு தெரியும் என்று தன்னை முன்னிலைபடுத்த முயற்சி செய்கிறார் அவரை பற்றி பேச வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
பழனிச்சாமியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம். அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம்… என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து கூறியுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil