கவிஞர் வைரமுத்து மீது 19 பாலியல் வழக்குகள் இருந்தும் அவர் மீது ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படாதது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த நிலையில், பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 23-ந் தேதி முதல் மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசியல் தலைவர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இதனிடையே டெல்லியில் நேற்று நடைபெற்ற புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது தங்களுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை வலியுத்தி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே மல்யுத்த வீரர்கள் கைது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கவிஞர் வைரமுத்து மீது இதுவரை 19 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து ஒருமுறை கூட அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் டெல்லியில் மல்யுத்த விராங்கனைகளில் குற்றச்சாட்டுகளில் பாஜக எம்.பி மீது 2 பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்தால் தான் அது குறித்து பேசுவேன் என்பது தவறான ஒன்று.
இதுவரை ஜந்தர்மந்தரில் அவர்கள் போராட்டம் நடத்த முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால், நேற்றைய சம்பவத்தில் எந்தவித உரிமையும் பெறாமல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக சென்றால், டெல்லி காவல் துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“