தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சையாக பேசியதாக வெளியான தகவலை தொடர்ந்து அதிமுக பாஜக இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், அண்ணாமலை பேசியது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கடந்த செப்டம்பர் 11-ந் தேதி சென்னையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 1956-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஒரு விழாவில், பசும்பொன் முத்துராமலிங் தேவர் பகுத்தறிவு கருத்துக்களை பேசிய அறிஞர் அண்ணாவை, மிக கடுமையாக சாடியிருந்தார். இது குறித்து மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பாலபிஷேகத்திற்கு பதில் ரத்த அபிஷேகம் நடைபெறும் என்று எச்சரித்தார்.
முத்துராமலிங்க தேவரின் இந்த எச்சரிக்கைக்கு பயந்து, அண்ணாவும் பி.டி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர் என்று அண்ணாமலை பேசியுள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், பா.ஜ.க அ.தி.மு.க இடையே கூட்டணி பிளவுக்கு வழிவகுத்துள்ளது. இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஜெயக்குமார் கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவுடன் பாஜக இல்லை என்று கூறியுள்ளார்.
1956-ம் ஆண்டு நடைபெற்ற மதுரை தமிழ் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அப்போது மதராஸ் மாகானத்தின் முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் மேடையில் அமர்ந்திருந்தபோது, மணிமேகலை என்ற சிறுமி பேசியுள்ளார். அவருக்கு அடுத்து பேசிய அறிஞர் அண்ணா, அந்த சிறுமியின் பேச்சை பகுத்தறிவோடு ஒப்பிட்டு பேசியுள்ளார். அன்றைய தினம் முடிந்து மறுநாளும் நிகழ்ச்சி தொடர்ந்துள்ளது.
அப்போது வருத்தத்துடன் மேடைக்கு வந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஆலயத்தில் தெய்வ நிபந்தனை பேச்சு நடந்தது நல்லதல்ல, அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லது இந்த விழாவை தமுக்கம் மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். தேவரின் கருத்துக்களை ஏற்காத பி.டி,ஆர், விழாவில் அவரவர் கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து பேசிய தேவர் எக்காரணத்தை கொண்டும் ஆலயத்தில் தெய்வ நிபந்தனை பேச்சு கூடாது. முதல் நாள் அண்ணாதுரை பேசியது பக்தர்களை புண்படுத்திவிட்டது. எனவே பொன்விழா நிகழ்ச்சிகளை இனி தமுக்கம் மைதானத்திற்கு மாற்றிவிட வேண்டும் என்று கூறியுள்ளார். மறுநாள் முதல் நிகழ்ச்சிகள் தமுக்கம் மைதானத்தில் மாற்றப்பட்டன பழைய பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
இதில் அண்ணாமலை சொன்னது போன்று, பாலபிஷேகத்திற்கு பதில் ரத்தபிஷேகம், மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவந்த கும்பல் என அனைத்தும் உண்மையில்லை. இதில் அண்ணா மற்றும் தேவர் இடையே கருத்து முரண் ஏற்பட்டது என்பது மட்டுமே உண்மை என்று தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.