தேர்தல் அரசியலில் இருந்து விலகிய முன்னாள் கர்நாடக துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கு உயர் பதவி காத்திருக்கிறது என்று தமிழக பாஜக தலைவரும், கர்நாடக பாஜக விவகாரங்களின் இணைப் பொறுப்பாளருமான கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் அடுத்த மாதம் நட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைவரும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா சிவமொக்கா தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், அவரது மகனுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் விரக்தியடைந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே இன்று (ஏப்ரல் 27) கர்நாடக மாநிலம், சிவமொக்காவில் நடைபெற்ற தமிழர்களின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை பேசுகையில்,
இத்தனை வருடமும் கட்சியைக் கட்டியெழுப்புவதில் அர்ஜுனனாக இருந்த ஈஸ்வரப்பா தற்போது பீஷ்மாச்சார்யா வேடத்தில் இருக்கிறார். இந்தியா முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். மிக உயர்ந்த பதவி அவருக்கு காத்திருக்கிறது. வரும் நாட்களில் தேசிய அளவில் முக்கிய பங்கு வகிப்பார் என்று கூறியுள்ளார்.
மேலும் பல தசாப்தங்களாக கட்சியை கட்டியெழுப்புவதற்காக ஈஸ்வரப்பா கர்நாடகாவில் என்ன செய்தாரோ அதை தான் தமிழகத்தில் செய்து வருவதாக கூறிய அண்ணாமலை புதிய முகங்களுக்கு வழி விடும் வகையில் அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். “பொதுவாக, பிரதமர் நரேந்திர மோடி காலையில் யாரையும் அழைப்பதில்லை. அவர் விஸ்வ குரு. அவர் அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள், உக்ரைன்-ரஷ்யா போர் அல்லது சூடானின் முன்னேற்றங்கள் பற்றி யோசிப்பார்.
ஆனால், அவர் ஈஸ்வரப்பாவை தொலைபேசியில் அழைத்து, அவரது முடிவுக்குப் பாராட்டுகளைத் தெரிவிப்பதற்கு அவர் நேரம் ஒதுக்குவது எளிதான காரியம் அல்ல. ஈஸ்வரப்பாவுக்கு தமிழ்நாட்டுடன் நல்ல உறவு ,இருக்கிறது. தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு அடிக்கடி செல்வார். “சிவமோகாவில் பாஜக வேட்பாளரை மக்கள் ஆதரிக்க வேண்டும் – எஸ்.என். சன்னபசப்பா நகரத்திற்கு அவர் செய்த பங்களிப்பிற்காக ஈஸ்வரப்பாவுக்கு அவர்கள் நன்றி சொல்ல வேண்டும், ”என்று அவர் கூறினார்.
ஈஸ்வரப்பா தனது உரையில், பாஜக அரசு அண்டை மாநிலமான தமிழக அரசுடன் எப்போதும் நல்ல உறவைக் கொண்டுள்ளது. பி.எஸ். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது சென்னையில் சர்வஞானச் சிலையும், பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டது. “இத்தகைய சைகைகள் காவிரி நதிநீர் தகராறு மற்றும் பிற பிரச்சினைகளில் வன்முறை சம்பவங்களை நிறுத்தியது,” என்று அவர் கூறினார்.
பாஜக வேட்பாளர் எஸ்.என். சன்னபசப்பா, பாரதிய ஜனதா கட்சியின் நகரப் பிரிவு பொறுப்பாளர்கள் மற்றும் நகர தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil