தமிழகத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிவை தொடர்ந்து தற்போது டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை பா.ஜ.க கூட்டணியுடன் சந்தித்த அ.தி.மு.க இரு தேர்தல்களிலும் படு தோல்வியை சந்தித்தது. குறிப்பாக தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க சந்தித்த தோல்வி அக்கட்சியை பெரிய பாதிப்புக்குள்ளாக்கியது. இதனால் தேர்தல் தோல்வி குறித்து கூட்டணி கட்சியான பாஜகவை அதிமுக தலைவர் விமர்சிப்பதும், பதிலுக்கு அதிமுகவை பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் விமர்சிப்பதும் தொடர்ந்து வந்தது.
இந்த விமர்சனங்களுக்கு இடையே இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை கூட்டணி குறித்து பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும் என்று இரு கட்சிகளுமே கூறி வந்த நிலையில், சமீபத்தில் மதுரையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து பேசிய சர்ச்சை கருத்து அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அன்று மாலையே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக கூறியது.
அதனைத் தொடர்ந்து அடுத்த இரு தினங்களில் அதிமுக பாஜக கூட்டணி இல்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி முறிவு குறித்து முக்கிய அரசியல் தலைவர்கள் பேசி வந்தாலும், பாஜக மேலிடம் அதிமுகவை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த பரபரப்புக்கு இடையே டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் அதிமுகவுடன் கூட்டணி முறிவு குறித்து விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றிரவு 8 மணிக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த அண்ணாமலை, அதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை பலப்படுத்தும் வகையில் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை கொடுத்த நிலையில், இன்று அண்ணாமலை அவரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் கூட்டணி முறிவு குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் நாளை நடைபெற இருந்த பாஜக நிர்வாகிகள் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“