கடந்த சில தினங்களாக பாஜகவில் இருந்து சிலர் அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், யார் சென்றாலும் அவர்களை வழியனுப்பி வைப்போம் என்று கூறியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா கலைஞர் போல் துணிச்சலாக முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில்,
ஒரு காலத்தில் தமிழக அரசியல் களம் திராவிட கட்சிகளில் இருந்து யாராவது 4 பேர் வந்து நமது பாஜகவை காப்பாற்றிவிட மாட்டார்களாக என்று திராவிட கட்சிகள் ஏங்கிக்கொண்டிருந்தனர். இன்றைக்கு சில திராவிட கட்சிகளில் வளர்ச்சிக்கு பாஜக தான் கண்முன் தெரிகிறது. பாஜக வளர்ந்து வருகிறது. தலைவர்களை உருவாக்கி வருகிறது. இங்கிருந்து மற்ற கட்சிக்கு செல்பவர்கள் அந்த கட்சி வீழ்ச்சியடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அண்ணாமலை இங்கு தோசை இட்லி சப்பாத்தி சுட வரவில்லை. எப்போதும் எனது தலைமை பண்பு ஒரு மேலாளரை போல் இருக்காது. நான் தலைவன். தலைவன் எப்படி இருக்க வேண்டுமே அப்படித்தான் நான் இருப்பேன். சில முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுகொள்ளாமால் போய்கொண்டே இருக்க வேண்டும்.
அம்மா எடுக்காத முடிவுகளா?, கலைஞர் அய்யா எடுக்காம முடிவுகளா? தமிழ்நாடு பார்க்காத ஆளுமையா? அதேபோலத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். கட்சி அதிர்வுகளை சந்தித்துக்கொண்டே தான் இருக்கும். கட்சியின் நன்மைக்கு தலைவரைபோல் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால், கொஞ்சம் கூட பயம் இல்லாமல் எடுப்பேன். எதற்கும் நான் பயப்பட போவதில்லை.
தலைவன் எடுக்கும் முடிவில் விலகி செல்பவர்கள் அவர்களின் விருப்பப்படி விலகி செல்லட்டும். அதற்கு நான் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை. பாரதிய ஜனதா கட்சியின் மேனேஜர் போல் அமர்ந்து இரண்டு இட்லி, தோசை சாப்பிட்டு விட்டு செல்வதற்காக நான் இந்த பொறுப்பிற்கு வரவில்லை. மூன்றாவது கியரில் மெதுவாக பயணிப்பதாகவே நான் இப்போது கருதுகிறேன். நிச்சயமாக 2024 தேர்தலுக்கு முன்பு ஐந்தாவது கியர் செல்லும் வேகத்தில் பயணிப்பேன். முதலமைச்சரை முதலில் நன்றாக தூங்க விடுங்கள்.
அவர் தூங்கி எழும்பொழுது என்ன பிரச்சனைகள் இருக்குமோ என்ற அச்சத்திலே தூங்க செல்வதனால் சரியாக தூங்காமல் இருக்கிறார். அதனாலேயே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரை தெளிவாக நீங்கள் தூங்க விட்டால் மறுநாள் தெளிவாக பேச தொடங்கி விடுவார்’ என்று கூறியுள்ளார்.
மேலும் என்னை பொறுத்தவரை பாஜகவை தெளிந்த நீரோடையாக வைத்திருக்க விரும்புகிறேன். தண்ணீர் ஓட தொடங்கினால் 4 பேர் வரவேண்டும் 4 பேர் போக வேண்டும். அப்போதுதான் கட்சிக்கு வளர்ச்சி. கட்சிக்குள் இருந்து ஒருவரை கூட வெளியில் விட மாட்டோம் என்று சொன்னால் இது சாக்கடையாக மாறிவிடும். அதனால் கட்சி தெளிந்த நீரோடையாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை மட்டுமல்ல மோடி அய்யாவின் ஆசையும் கூட என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil