ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் தனக்கு சந்தோஷம் என கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? , டிடிவி தினகரன் மூலமாக பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, அப்படி அவர் வந்தால் எனக்கு சந்தோசம் என பதில் அளித்தார்.
மேலும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனரும் பங்கேற்பார்களா என்ற கேளவிக்கு, தினகரனிடம் நான் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். தினகரன் எங்கள் கூட்டணியில் இருக்கிறார். நீங்கள் நினைப்பதை போல வெகுவிரைவில் எல்லோரும் ஒரே மேடையில் ஏறுவோம் என தெரிவித்தார். டிடிவி பெயரையும், அவரது கட்சி பெயரையும் எடப்பாடி பழனிச்சாமி சொல்லாமல் தவிர்பது குறித்த கேள்விக்கு, முறையாக சில ஏற்பாடுகள் முடிந்த பின்னர் எல்லாருடைய பெயரையும் சொல்வார் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்தின்,திமுக தோல்வி பயத்தில் இருக்கின்றனர். திமுக கூட்டணி வலுவாக இருப்பதைப் போல மாயை உருவாக்கி இருக்கின்றனர்.தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு ,கொலை கொள்ளை கஞ்சா கடத்தல்,போதை பொருள் நடமாட்டம் என அதிகரித்துள்ளது. வழக்கமாக ஆளுங்கட்சிக்கு 10 சதவீதம் எதிர்ப்பு இருக்கும் ஆனால் இந்த ஆட்சியின் மீது 100 சதவீதம் எதிர்ப்பு மக்களிடம் இருக்கிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். சுயமரியாதை முக்கியம் என ஓபிஎஸ் சொல்கிறார். அவரது சுயமரியாதை பாதிக்கக் கூடிய அளவிற்கு என்ன செய்தீர்கள் என செய்தியாளர் கேள்வி எழுப்பவே எல்லோருக்கும் சுயமரியாதை முக்கியம். உங்களுக்கும் முக்கியம். எனக்கும் முக்கியம். வெகு விரைவில் நீங்கள் நினைப்பது போல நடக்கும் எனவும் பதிலளித்து சென்றார் நயினார் நாகேந்திரன்.