பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, நயினார் நாகேந்திரன், பா.ஜ.க.வின் கோபுரத்தில் கலசம் வைத்தவர் அண்ணாமலை என்று முன்னாள் தலைவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த வகையில் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக இல்லாமல் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து தோல்வியை சந்தித்தது.
இதனிடையே 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக பாஜக கூட்ணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ.க தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரின் பதவியேற்ப்பு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய புதிய தலைவர் நயினார் நாகேந்திரன், என்மீது நம்பிக்கை வைத்து மாநில தலைவர் பதவிக்கு தேர்வு செய்த கட்சி தலைமைக்கு நன்றி. தமிழகத்தில் முன்னாள் தலைவர்கள் பா.ஜ.க.வை படிப்படியாக வளர்த்து வந்தார்கள். ஒவ்வொரு படியாக கட்டப்பட்ட பா.ஜ.க.வின் கோபுரத்திற்கு கலசம் வைத்தவர் அண்ணாமலை. 2026 சட்டசபை தேர்தலில் அந்த கலசத்திற்கு குடமுழுக்கு நடத்தப்படும். 2026-ல் நிச்சயமாகன தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும். தாமரை மலர்ந்தே தீரும்.
அண்ணாமலை புயலாக இருந்தால் நான் தென்றலாகத்தான் இருக்க முடியும். அதிமுகவில் இருந்தபோதே பா.ஜ.க.வுக்கு வர வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் சொல்வார். தமிழகத்தில் பெண்களை மதிக்காத மக்கள் விரோத ஆட்சியை விரைவில் விரட்டியடிக்க பாடபட வேண்டும். 2026 ஆட்சி மாற்றத்திற்கு அமித்ஷா அடிக்கல் நாட்டிவிட்டார். அதனால், அண்ணாமலை இனி செருப்பு அணிந்துகொள்ள வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, அண்ணாமலை மேடையிலேயே செருப்பு அணிந்துகொண்டார்.