மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள மேகேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதில் தமிழக, கர்நாடக அரசுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்க மேகதாதுவில் அணை கட்டவும், தண்ணீரைப் பயன்படுத்தவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அணை கட்டுவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/E8B2tbQUcAM-jmI.jpg)
அதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய பதில் கடிதத்தில் கர்நாடக முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பாவை மேகேதாட்டு திட்டத்தை தொடர வேண்டாம் என வலியுறுத்தினார். மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், பெங்களூருக்கு குடிநீர் வழங்க ஒரே வழி மேகதாது அணை கட்டுவதுதான் என்பதை ஏற்க தயாராக இல்லை என்றும் முதல்வர் கூறினார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர், தஞ்சையில் கர்நாடக அரசை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் பாஜக சார்பில் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இதற்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் கர்நாடக பாஜக அரசை விமர்சித்தார், அண்ணாமலை மற்றும் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை இருவரையும் மத்திய அரசின் இரண்டு 'பொம்மைகள்' என்று அழைத்தார். மேலும், அண்ணாமலையின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் குறிப்பிட்டு, பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் கமலஹாசன் கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/E8B2tbPUYAYmR72.jpg)
இன்று தஞ்சையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த போராட்டம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். குறிப்பாக, மய்யம் என்று கட்சி ஆரம்பித்து விட்டு மையம் இல்லாமல் செயல்படும் ஒருவர், இரண்டு பொம்மைகள் என்கிறார். நடிப்பின் உச்சகட்டம் அரசியல் என்பதை புரிந்து கமல் அரசியலுக்கு வந்துள்ளார். சாராயம் விற்கும் அமைச்சரை பக்கத்திலும் வேளாண்மை அமைச்சரை தூரத்திலும் வைத்திருக்கும் அரசு தான் தமிழகத்தில் உள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்தை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேவலமாக, இழிவாக பேசியுள்ளார். அவர் உடனே பதவி விலக வேண்டும். அரசியலில் மனசாட்சி இருந்தால் மட்டுமே மக்களிடம் சாட்சியாக இருக்க வேண்டும்.
இன்னொரு முறை தயாநிதி மாறன் எங்களைப் பற்றி பேசினால், அவர்களின் எல்லாம் விஷயமும் சந்திக்கு வரும். உங்களைப் பற்றி எல்லாமும் எங்களுக்குத் தெரியும். தற்போது நடைபெறும் போராட்டம் கர்நாடக அரசை ஒட்டு மொத்தமாக எதிர்த்து நடைபெறுகிறது. கர்நாடக அரசை மட்டுமல்ல அங்குள்ள காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளையும் எதிர்த்துதான் இந்த போராட்டம். நிச்சயம் அவர்களால் அணை கட்ட முடியாது. சட்டம் அப்படி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஆகியவை அணை கட்ட முடியாது என்று கூறியுள்ளது. என்று அண்ணாமலை பேசினார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/E8B2tbOUUAYVWFz.jpg)
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை "மேகதாது அணை எங்கள் உரிமை. மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும். யார் வேண்டுமானாலும் எதிர்ப்பு தெரிவிக்கலாம்," என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil