இண்டிகோ விமானத்தில் அவசர வழிக் கதவை பா.ஜ., எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
பா.ஜ.க யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவரும், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சென்னை விமான நிலையத்தில், இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு முன்பு அவசரகால வெளியேறும் கதவைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: சென்னை 2வது விமான நிலையம்: பரந்தூரில் இடம் அனுமதி கோரி டிட்கோ விண்ணப்பம்
இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம் அளித்தார். ”விமானத்தில் அவசர வழி கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் தவறுதலாக கதவு திறக்கப்பட்டதாக பா.ஜ.க எம்பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டு விட்டதாக ஜோதிராதித்திய சிந்தியா கூறினார். இதன் மூலம் அவசர வழிக் கதவை திறந்தது தேஜஸ்வி சூர்யா என்பது உறுதியானது.
இந்தநிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, விமானத்தின் கதவை தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை என கூறியுள்ளார்.
”தேஜஸ்வி சூர்யா படித்தவர். விமானத்தின் அவசர கதவை திறக்க வேண்டிய அவசரம் அவருக்கு இல்லை. எமர்ஜென்சி கதவில் இருந்த இடைவெளியை பார்த்ததும் விமானப் பணியாளர்களை அழைத்துக் கூறினார். இதை நானும் பார்த்தேன். பணிப்பெண்கள் பின்னர் பைலட்டை அழைத்தனர். ஏர் விண்ட்-ஐ அட்ஜெஸ்ட் செய்யும்போது தவறுதலாக கதவு திறக்கப்பட்டதாக தேஜஸ்வி நடந்தது அனைத்தையும் கூறினார். பின்னர் நெறிமுறைகளின்படி, விமானம் முழுமையாக சரிபார்க்கப்பட்டது. அவர் தவறு செய்யவில்லை என்றாலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அவர் எம்.பி என்ற பொறுப்பில் இருப்பதால் மன்னிப்பு கோரினார்,” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil