தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்த்துப் பேசினார். காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக அரசியல் நிலவரங்களை ஆளுநரிடம் விளக்கியதாக, தமிழிசை தெரிவித்தார்.
சுப்ரிம் கோர்ட் உத்தரவு படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக எதிர்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், உள்துறை அமைச்சக அழைப்பை ஏற்று டெல்லி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து விவரித்தார்.
ஆளுநர் புரோகித் 4ம் தேதி சென்னை திரும்பினார். நேற்று மாலை 7 மணியளவில் தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை வரவழைத்து தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதித்தார்.
இன்று காலை முதல் எதிர்கட்சிகள் விடுத்த அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கவர்னர் மாளிகைக்கு வந்தார். அவருடன் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த தமிழிசையிடம் கேட்ட போது, ‘‘தமிழக கவர்னரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். காவிரி பிரச்னையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் குறித்தும், அதில் பிரிவினைவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருபப்து குறித்தும் ஆதாரங்களுடன் சொன்னேன். அதை கவனத்துடன் கேட்டுக் கொண்ட கவர்னர், எல்லாம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். அப்போது எல்லா பிரச்னைகளும் முடிவுக்கு வந்துவிடும் என தெரிவித்தார். பிரிவினை சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்’’ என்றார்.