செங்கல்பட்டு அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, மர்ம நபர் ஒருவர் மேடையில் திடீரென தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையைத் தமிழகத்திற்கு கொண்டு வந்த பாஜகவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, மற்ற கட்சிகள் குறித்தும் அவர் விமர்சித்துப் பேசினார். அப்போது கூட்டத்திருந்து மர்ம நபர் ஒருவர் மேடை நோக்கி ஆவேசமாக வந்து, மேடையில் பேசிக்கொண்டிருந்த தமிழிசையை தாக்க முயற்சித்தார். ஒரு நொடிக்குள் இதனைச் சுதாரித்த பாஜக தொண்டர்கள் அந்த நபரை தடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் கோபமடைந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கூட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இல்லை என்றும் பாதுகாப்பு குறைபாடே இது போன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்றும் காவல்துறையை குற்றம்சாட்டினார். இது குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.