தமிழக அரசியலில் வலிமையாக கால் பதிக்கும் முயற்சியில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க, மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை தேர்வு செய்துள்ள நிலையில், முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அதிமுக பா.ஜ.க கூட்டணி தோல்வியை சந்தித்தால், தி.மு.க கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து தேர்தல் தோல்விக்கு காரணம் அதிமுகதான் என்று பா.ஜ.கவும், பா.ஜ.க தான் காரணம் என்று அதிமுகவும் மாறி மாறி குற்றம்சாட்டியதால், இதில் ஏற்பட்ட மோதலின் காரணமாக இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற, நாடாளுமன்ற தோதலில், அதிமுக இல்லாமல், பா.ம.க, த.மா.க உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில் பா.ஜக. தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை கொண்டுவரும் வகையில், மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, முயற்சித்த பா.ஜ.கவுக்கு அதிமுக பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதனையடுத்து அதிமுக பா.ஜ.க இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கட்சியில் மாற்றம் செய்த பா.ஜ.க தமிழ்நாடு பா.ஜக தலைவராக நயினார் நாகேந்திரனை ஒருமனதாக தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் இன்று தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழிசை சௌந்திரராஜன், எல்.முருகன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோரும் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் நாடாளுமன்ற தேர்தலின்போது தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைந்த நடிகர் சரத்குமார், தன்னையும் பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார். இதனிடையே, தற்போது சரத்குமார் பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன், ராம.சீனிவசன், கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, வினோஜ் செல்வம், பால் கனகராஜ், நாராயணன் திருப்பதி ஆகியோரும் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.