தமிழக பாஜக புதிய தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ்?

Tamilnadu Bjp Party News : தமிழகத்தில் புதிய பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Tamilnadu New BJP Leader Update : தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரானதை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. தற்போது பாஜக 2-வது முறையாக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் பழைய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிதாக 43 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் தமிழக தலைவர் எல்.முருகனும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன், கடந்த சட்டசபை தேர்தலில் திருப்பூர் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதனைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவை விரிவாக்கத்தில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து கட்சி மேலிடம் கொடுத்த அனைத்து பணிகளையும் திறம்பட செய்து முடித்த எல்.முருகன் கட்சியின் மேலிடத்தில் நன்மதிப்பை பெற்றார். மேலும் அவர் தமிழகத்தில் நடத்திய வேல் யாத்திரை பெரும் பிரபலமான நிலையில், கட்சியின் பல முக்கிய நபர்கள் இணைவதில் முக்கிய பங்காற்றினார்.

இவருக்கு முன் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், அதே ஆண்டு  தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தற்போது புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநாகவும் பணியாற்றி வருகிறார். இதன் மூலம் இந்தியாவில் எந்த கட்சியும் செய்யாத வகையில், தமிழகத்தில் பாஜக தலைவராக பதவியில் இருப்பவர்களுக்கு கட்சி மேலிடம் பல்வேறு பதவிகள் கொடுத்து கவுரவித்து வருகிறது. இதனால் அடுத்து இந்த பதவிக்கு யார் வருவார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.  

கரூர் மாவட்டத்தை சேர்த்த அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தான் பதவியில் இருந்தபோது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர், கடந்த 2019-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து தமிழகம் திரும்பிய அவர், கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து பாஜக மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட இவர், கடந்த சட்டசபை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். ஆனாலும் குறுகிய காலத்தில் கட்சியில் நன்மதிப்பை பெற்றுள்ள இவர், தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சியாக இருந்த போது எதிர்கட்சிக்கு தனது பலமான எதிர்ப்பு விமர்சனங்களை தெரிவித்து வந்தார்.

மேலும் தேர்தலுக்கு முன்பு கூட்டணி கட்சி ஆட்சியில் இருந்தால் அனுசனையான அரசியல் செய்ய வேண்டிய நிலை இருந்தது. வேகமாக இயக்க முடியாத சூழலும் ஏற்பட்டது. ஆனால் தற்போது எதிர்கட்சி தமிழகத்தில் ஆளும்கட்சியாக உள்ளது. இதனால் பாஜக ஒரு வேகமான அரசியலை முன்னுக்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பணிகளுக்கு அண்ணாமலை ஐபிஎஸ் சரியான தேர்வாக இருப்பார் என்று பாஜக மேலிடம் கருதுகிறது. எதிர்கட்சிகள் தொடர்பான விமர்சனங்களை மிகவும் கூர்மையாக செலுத்தி வரும் அவர், நீட் தேர்வு தொடர்பாக புள்ளிவிவரங்களை சரியான முறையில் எடுத்து கூறியிருந்தார். இதனால் வேகமான அரசியல் மற்றும் எதிர்கட்சிகளுக்கு சரியான விமர்சனங்கள் கொடுக்கும் முன்னோக்கிய அரசியல் அவரிடம் இருப்பதால், தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக அவரை நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஆனாலும் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டி இல்லாமல் இல்லை. ஆனால் இந்த தலைவர் பதவிக்கு பாஜக மேலிடம் இல.கணேசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் பொன்ற கட்சியின் மூத்த தலைவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், இளம் வயது தலைவரைத்தான் தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் வானதி சீனிவாசன் ஏற்கனவே எம்எல்ஏ மற்றும் மகளிர் அணி தலைவியாக உள்ளார். தொடர்ந்து எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டமன்ற கட்சி தலைவராக உள்ளார். இதனால் இவர்களுக்கு தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புகள் குறைவு.

இதில் கரு.நாகராஜன் ஏற்கனவே மாநில பொதுச்செயலாளராக உள்ள நிலையில், கே.டி.ராகவன் மற்றும் எஸ்.ஆர்.சேகர் போன்றோரும் அதே பொறுப்பில் உள்ளார். இவர்கள் மூவரும் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்தாலும் திமுகவுக்கு கடும் சவால் அளிக்கக்கூடிய, கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கவும், கட்சியை ஒருங்கிணைத்து வழி நடத்தவும் அண்ணாமலை சரியான தேர்வாக இருப்பார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த பதவிக்கு போட்டி இருக்கிறது என்பதே நிதர்சமான உண்மை. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu bjp party new leader annamalai ips update tamil

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com