Advertisment

கந்துவட்டி கொடுமை... பெண்ணை தனி அறையில் அடைத்து சித்ரவதை : திருச்சியில் பா.ஜ.க. பிரமுகரிடம் விசாரணை

வாங்கிய கடனை திருப்பி தராத காரணத்தினால் ஆத்திரமடைந்த உமாராணி மாலதியை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
BJP Trichy

திருச்சியில் 6 லட்ச ரூபாய் கடனுக்காக, 2 மாதமாக ஒரு பெண்ணை, பாஜகவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவலறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் அந்த பெண்ணை அதிரடியாக மீட்டனர்.

Advertisment

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை அருகே விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் மதியழகன். சினிமா துணை நடிகராக உள்ள இவருக்கும், மாலதி என்ற மனைவியும், நடராஜ் என்ற மகனும் உள்ளனர். மதியழகன் மனைவி மாலதி, விஸ்வாஸ் நகர் அருகே ஏபி நகரை சேர்ந்த பாஜக பிரமுகர் உமாராணி என்பவரிடம், 6 லட்ச ரூபாய் கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி தராத காரணத்தினால் ஆத்திரமடைந்த உமாராணி மாலதியை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும் உமாராணி தனது வீட்டில், கடந்த, 2 மாதமாக மாலதியை தனியறையில் அடைத்து வைத்து, மாலதியை கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மனைவி மாலதியும், மகன் நடராஜூம் திடீரென மாயமானதால் அவர்கள் எங்கு சென்றார்கள் எனத் தெரியாமல் மதியழகன் உறவினர்களுடன் தேடி வந்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகுதான் மாலதி உமாராணியால் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சேலம் நீதிமன்றத்தில் பணிபுரியும், மதியழகனின் தம்பி சதீஷ் என்பவர், திருச்சி வழக்கறிஞர்கள் சிலரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வழக்கறிஞர் திவாகர் தலைமையில் சில வழக்கறிஞர்கள், உமாராணியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களை வீட்டிற்குள் நுழைய விடாத உமாராணி, அவர்களிடம், 2 மணி நேரத்திற்கு மேல் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து வழக்கறிஞர்கள், திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் உமாராணியின் வீட்டிற்குள் புகுந்து அங்கு தனியறையில் அடைக்கப்பட்டிருந்த மாலதியை மீட்டனர். மீட்கப்பட்ட மாலதி, படபடப்பு நீக்காதவராக, கண்களில் நீர்பெருக, போலீசாரின் கால்களில் விழுந்து நன்றி தெரிவித்தது, காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. மாலதியை தனியறையில் அடைத்து வைத்திருந்த உமாராணியை, போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

திருச்சி பாஜக காந்தி மார்க்கெட் மண்டல துணைத் தலைவராக உள்ள உமாராணியிடம், நடந்த சம்பவம் குறித்து கேட்டபோது; நான் மாலதியை கடத்த வில்லை திருச்சியில் பல பேரிடம் மாலதி ஏராளமாக கடன் வாங்கி வைத்திருப்பதாகவும், கடன் கொடுத்தவர்களிடமிருந்து அவரை காப்பாற்றவே தனது வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்திருந்ததாகவும் கேஷூவலாக தெரிவித்தார். மாலதியை மீட்ட காந்தி மார்க்கெட் போலீசார், மதியழகன் மகன் நடராஜின் நிலை என்ன என்பது குறித்து உமாராணியிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருச்சியில் கந்துவட்டி கொடுமை காரணமாக, பெண் ஒருவர் இரண்டு மாதமாக தனியறையில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tiruchirapalli Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment