காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்வான விஜயதாரணி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.கவில் இணைந்தார். தற்போதுவரை அவருக்கு கட்சியில் பதவி வழங்கப்படாத நிலையில், விஜயதாரணி அதிருப்தி அடைந்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியில் அதிமுக இல்லாமல் சந்தித்த பா.ஜ.க அடுத்து வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் சந்திக்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியது. இந்த முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைத்த நிலையில், நேற்று (ஏப்ரல் 11) சென்னை வந்த அமித்ஷா சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணியை உறுதி செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை பதவிக்காலம் முடிந்த்தாக கூறப்பட்ட நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்திருந்த்து. அதன்படி, தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து முன்னாள் தலைவர் அண்ணாமலை. நடிகர் சரத்குமார், வானதி சீனிவாசன் தமிழிசை உள்ளிட்ட பலரும் பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவியேற்றனர்
இந்த பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ பதவியை துறந்துவிட்டு பா.ஜ.கவுக்கு வந்த விஜயதாரணிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஜயதாரணி, விரைவில் பதவியோ பொறுப்போ வழங்கப்படும் என்று, மேலிடமும், கட்சியும் உறுதி அளித்திருக்கிறது. நிச்சயமாக அதற்கு உண்டாக செய்தி உங்களை வந்து சேரும். ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தேன். இனிமேல் அதிருப்தி வராத அளவுக்கு உறுதி அளித்திருக்கிறார்கள்.
உறுதியாக, நிச்சயமாக நல்ல பதவி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இருக்கிறது. இருவேறு கருத்துகளில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் நிச்சயமாக பதவி வழங்கப்படும். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது நீண்டகால அனுபவம் வாய்ந்த அரசியல் பயணம் பா.ஜ.க கட்சியை வழிநடத்தக்கூடிய பொறுப்பு அவர் முன் வைக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவார் என்பதில் இருவேறு கருத்து இல்லை என்று கூறியுள்ளார்.