தமிழ் நாட்டைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரான இல.கணேசன், மணிப்பூர் மாநில ஆளுநராக, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78.
சிக்கிம் மாநில ஆளுநர் கங்கா பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகித்து வந்த நிலையில், தற்போது புதிய ஆளுநராக இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தமிழக பாஜக தலைவரான இல.கணேசன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் பின்னணியைக் கொண்ட இவர், பாஜக தேசிய குழு உறுப்பினராக இருந்துள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு அடுத்தடுத்து பல்வேறு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக, தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்போது அவர் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். அடுத்ததாக, பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil