நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரு பெரும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் களமிறங்கிய பா.ஜ.க வெற்றி பெறவில்லை என்றாலும், தமிழகத்தில் தனது வாக்கு சதவீதத்தை இரட்டை இலக்கமாக உயர்த்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அளவில் பாஜக கூட்டணி 290 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தனியாக ஆட்சி அமைக்க இரு கட்சிகளுக்குமே பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் போராடி வருகின்றன.
இதனிடையே வட இந்தியாவில் பாஜக சற்று சரிவை சந்தித்திருந்தாலும், பல மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், வழக்கம்போல் தென்னிந்தியாவில் பா.ஜ.கவுக்கு இறங்கு முகமாகவே உள்ளது. குறிப்பாக, பாண்டிச்சேரியை சேர்ந்து 40 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் பா.ஜ.க தனது வாக்கு சதவீதத்தை இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது.
கடந்த 2019- மக்களவை தேர்தல், மற்றும் 2021 தமிழக சட்டசபை தேர்தல் என இருமுறை அதிமுகவுடன் கூட்டணியில் களமிறங்கிய பா.ஜ.க. கடந்த ஆண்டு கூட்டணியை முறித்துக்கொண்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாக தமிழகத்தில் போட்டியிட்டது. பிரதமர் மோடி தமிழகத்தில் பலமுறை பிரச்சாரத்திற்கு வந்திருந்தார்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று (ஜூன் 4) நடைபெற்ற நிலையில், காலை 8 மணி நிலவரப்படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் உள்ள தரவுகளின்படி., பாஜக, 23 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு, மாநிலத்தில் கிட்டத்தட்ட 11.1% வாக்குகளைப் பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாஜக நேரடியாக 19 தொகுதிகளில் களமிறங்கிய நிலையில், நான்கு கூட்டணி கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. அவர்களது வேட்பாளர்கள் எவரும் வெற்றிபெறவில்லை என்றாலும், தமிழ்நாட்டின் ஒன்பது தொகுதிகளில் இந்தியக் கூட்டணியின் ஒரு அங்கமாகப் போட்டியிட்டு 10.78% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸை விட பா.ஜ.க சற்று அதிகமாக வாக்குகளை பெற்றுள்ளது. 2019 தேர்தலில் கட்சி ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டபோது அதன் வாக்குகள் 3.6% ஆக இருந்தது.
கோவையில் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தோல்வியை சந்தித்திருந்தாலும், மும்முனைப் போட்டியில் இருந்த இந்த தொகுதியில், அ.தி.மு.க.வின் சிங்கை ஜி.ராமச்சந்திரனை விட அதிகமாக வாக்குகள் பெற்றிருந்த தி.மு.க.வின் கணபதி பி.ராஜ்குமாரிடம் தோல்வியை சந்தித்தார். அதேபோல் தமிழகத்தில் பாஜகவின் வேறு சில பிரபலங்கள் தோல்வியைத் தழுவினாலும், வாக்கு சதவீதத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பிடித்தது பா.ஜ.க.
நீலகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், சென்னையில் தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், திருநெல்வேலியில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் நைனார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். வேலூரில் பாஜக கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சியைச் சேர்ந்த ஏ.சி.சண்முகமும் 2-வது இடத்தைப் படித்தனர்.
சென்னை சென்ட்ரலில் பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், மதுரையில் மதுரையில் ராம.ஸ்ரீனிவாசன்,. திருவள்ளூரில் வி.பாலகணபதி (எஸ்சி), ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் டி.டி.வி.தினகரன் ஆகியோரும் 2-வது இடத்தை பிடித்து அதிமுகவை பின்னுக்கு தள்ளினர். சுவாரஸ்யமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களில், பாமகவின் சௌமியா அன்புமணி மட்டுமே கூட்டணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னேறி சென்றார்.
வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டங்களில் முன்னிலை வகித்த அவர் கிட்டத்தட்ட 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதேபோல் ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா., சார்பில் ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட்ட, அக்கட்சி 2வது இடத்தை கூட பெறவில்லை. இதனிடையே தேர்தல் குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில வாக்காளர்களுக்கு நன்றி. நாடாளுமன்றத்தில் தமிழக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்காததற்காக நாங்கள் [பாஜக] வருத்தப்பட்டாலும், தொடர்ந்து கடினமாக உழைத்து, மக்களின் ஆணையைப் பெறுவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவோம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.