ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் உத்தரவு : தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு சில தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் படி, தொற்று குறைந்த மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்ட 27 மாவட்டங்களுக்கு தற்போது உள்ளதை விட, கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கும் அனுமதி வழங்க்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் தளர்வுகள் வழங்க்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமான பொதுப் போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.
காவிரி நீர் திறப்பு விவகாரம்; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் :
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மாதந்தோறும் உரிய அளவில் காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும் என, மத்திய நீர்வளத் துறை அமைச்சருக்கு கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
ஓட்டுநர் உரிமம் பெற புதிய விதிகள் :
ஜூலை 1-ம் தேதி முதல் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றால், அந்த சான்றிதழை வைத்து ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை எத்தனை வழிகளில் பாஜக கொள்ளையடிக்கப் போகிறதோ? ; ராகுல் காந்தி சாடல்!
இந்தியாவில் ஜி.டி.பி.சிதைந்து வருகிறது. நாட்டில் வேலையிண்மை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை விண்ணை முட்டுகிறது. இன்னும் எத்தனை வழிகளில் பாஜக அரசு நாட்டை கொள்ளை அடிக்கப்போகிறதோ என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடுமையாக சாடி உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தநீலையில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2339705 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்பு காரணமாக இன்று ஒரே நாளில் 374 பேர் லீயான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 29280 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி லட்ச்மத் நகரில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
ஐஎம்டிபி வெளியிட்டுள்ள 2021ஆம் ஆண்டிற்கான பிரபலமான முதல் 10 திரைப்படங்கள் பட்டியலில் விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' முதல் இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படம் 6வது இடத்தை பெற்றுள்ளது
தமிழகத்திற்கு இன்று ஒரே நாளில் 8 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. காலையில் 1 லட்சத்து 25 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்த நிலையில், மாலையில் 7 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது. மத்திய அரசு தொகுப்பிலிருந்து சுமார் 4 லட்சம் தடுப்பூசிகளும், தமிழக அரசு கொள்முதல் செய்த 4 லட்சம் தடுப்பூசிகளும் தற்போது வந்துள்ளன.
சென்னை அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், சேப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது, பற்றாக்குறை உள்ள இடங்களில் பெண்கள் நியமிக்கப்படுவர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
ரெம்டெசிவிர் உள்ளிட்ட 3 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், மருத்துவ ஆக்சிஜன், வெண்டிலேட்டர் மாஸ்க், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. கொரோனா சோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர், சானிடைசர், வெப்ப சோதனை கருவி ஆகியவற்றின் வரியும் குறைப்பு. கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை
100 நாட்களில் தமிழக கோயில்களில் 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் பணி செய்வார்கள் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
கொரோனா உயிரிழப்புகளை குறைத்து காட்டுவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்றும், ஐசிஎம்ஆர் விதிமுறைகளின்படி இணை நோயால் உயிரிழந்த நபர்களை கொரோனாவால் உயிரிழந்ததாக கருத வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும்,
11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு 9ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை தற்போது ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று மாலை 06:30 மணிக்கு வேல்ஸ் அணியை சுவிட்சர்லாந்து அணி எதிர்கொள்கிறது. டென்மார்க் – பின்லாந்து இடையேயான போட்டிகள் இரவும் 09:30 மணிக்கும், ரஷ்யா – பெல்ஜியம் இடையேயான போட்டி இரவு 12:30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதுவரை 98 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்று மாலைக்குள் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியை எட்டிவிடும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஜூன் 12ம் தேதி அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. அணையை திறந்து வைத்து முக ஸ்டாலின் ”டெல்டா பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 9 மாவட்டங்களில் இது போன்று 647 பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரூ. 65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
9ம் வகுப்பு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளது.
கொரோனா 3வது அலை வருவது நிச்சயம் என்பதால் அதனை எதிர்கொள்ள போர்கால அடிப்படையில் டெல்லி அரசு தயாராகி வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்
புதுவை சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 16ம் தேதி துவங்கும் என்று அம்மாநில சட்டப்பேரவை செயலாளர் முனிசாமி அறிவித்துள்ளார். அப்போது சட்டப்பேரவைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிகளை பெறுவதற்காக குறுவை சாகுபடிக்கான நீர் தேவைக்கு மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ. 240 குறைந்துள்ளது. தற்போது ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ. 4605 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 36, 840 ஆகவும் உள்ளது.
கீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகம் அடைந்த மக்கள் கீழடியில் வாழ்ந்து வந்தனர் என்பதற்கான தரவுகள் அகழ்வாய்வில் கைப்பற்றப்பட்ட நிலையில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 719 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84,332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் 1,21,311 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 4002 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரிசோதனை முடிவுகள் தாமதமாக வெளியாகும் சிக்கலை தவிர்க்க, பரிசோதனை முடிவுகளை RT – PCR இணையதளத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு வரி நீக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.