தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்க வேண்டும் என்றும், எங்கள் கட்சியின் யானை சின்னத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக கூறி, தமிழக தேர்தல் ஆணையரிடம் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ள விஜய், கடந்த வாரம் தனது கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இதில், மேலும் கீழு, சிகப்பு நிறம், நடுவில் மஞ்சள் நிறம், இரு பக்கமும் யானை நடுவில் மலர் என்று வடிவமைத்திருந்தனர்.
இந்த கொடியுடன் சேர்ந்து கொடிக்கான பாடலையும் வெளியிட்டிருந்தார் விஜய். இந்த பாடல் மற்றும் கொடி தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும நிலையில், பொதுமக்கள் பலரும், விஜய் கட்சி கொடியில் இந்தியாவில் உள்ளது எதுவும் இல்லை. அவரின் கொடி ஸ்பெயின் நாட்டை சேர்ந்தது என்றும், அதில் உள்ள மலர் அமெரிக்கா, மற்றும் யானைகள் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தது என்றும் கூறி வருகின்றனர்.
இதனிடையே விஜய் தனது கட்சி கொடியில் யானை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதில் இருந்து யானையை அகற்ற வேண்டும் என்றும் கூறி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு கிளையை சேர்ந்தவர்கள் பலரும், தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலக செயலாளர் வழக்கறிஞர் மதுமதி கொடுத்துள்ள மனுவில், நீள கொடியும், யானை சின்னமும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளம்.
இதில் யானை சின்னம் டாக்டர் அம்பேத்கர் தேர்தலில் போட்டியிட்ட சின்னமாகும். இதனால் யானை சின்னத்திற்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே உணர்வுப்பூர்வமான ஒரு வரலாற்று உறவு இருக்கிறது.
தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய், தனது கட்சியின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தியுள்ளார். தேசிய அங்கீகாரம் பெற்ற யானை முகம் அதில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் விஜயிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்த நிலையில், அவர் இதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இதன் காரணமாக தமிழக தலைவர் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்கும் என்றாலும் கூட, இது குறித்து எங்களிடம் கருத்து கேட்பார்கள்.
எங்களிடம் விளக்கம் கேட்கும்போது அது பற்றி விரிவான விளக்கம் கொடுக்க நாங்கள் தயார். அதே நேரத்தில் அடுத்தக்கட்டமாக சட்டரீதியாக நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் யானை சின்னத்தை அவர்கள் கொடியில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அரசியல் நாகரிகம் இல்லாமல் ஒரு அங்கீகாரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சின்னத்தை முறைகேடாக விஜய் தனது கட்சி கொடியில் பயன்படுத்தியுள்ளார். இதனால் தமிழக வெற்றிக் கழக கொடியில் இருந்து யானை சின்னத்தை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.