Tamilnadu Budget 2021 Highlights Tamil News : 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதி நிறைவடைவதை அடுத்து, துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 11-வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகம் விரைவில் தேர்தலைச் சந்திக்க உள்ள இந்த நிலையில் மக்களைக் கவரும் வகையிலான பல அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடன் அதிகரித்துக்கொண்டே போகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாமல், கொரோனா நிவாரணமாக குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்கியது. மேலும், பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், 2016-ம் ஆண்டு அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, 2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி ரூபாய்க் கடன் இருந்தது. இது, 2017-18 நிதி ஆண்டில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாகவும் 2018-19-ல் 3 லட்சத்து 55 ஆயிரத்து 844 கோடி ரூபாயாகவும், 2019-20ல் 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாகவும் கடன் அளவு உயர்ந்தது.
இந்நிலையில் 2020-21-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் கடன் 4 கோடியே 56 லட்சம் ரூபாயாக இருந்தது. மேலும், இடைக்கால பட்ஜெட்டில் கடன் சுமை 5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடன்கள் தள்ளுபடி என்றும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின.
மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன், கல்விக் கடன்கள் தள்ளுபடி, திடீரென ஏறிய பெட்ரோல் டீசல் விலையை அரசு குறைப்பது உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் மக்களிடத்தில் அதிகம் நிலவுகிறது. ஏற்கெனவே அதிகப்படியான கடன் சுமையில் இருக்கும் தமிழக அரசு புதிய அறிவிப்புகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? இந்தச் சவாலை எப்படி அரசு எதிர்கொள்ளப்போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர் மக்கள்.
இந்நிலையில் பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், தமிழக சட்டப்பேரவையில் 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது, பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு, காவல்துறையை நவீனமயப்படுத்தும் வகையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக என்று துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அறிவித்தார். மேலும், பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைக்க மத்திய அரசுக்கு பட்ஜெட் உரையில் கோரிக்கை விடுத்தார்.
திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றும் திருமண உதவித் திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார். மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் துணை முதல்வர் அறிவித்தார்.
இளைஞர்கள் நலனுக்கு ரூ.229.37 கோடி ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பலவ்வேறு நிதிகளை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை என சட்டமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000-ல் இருந்து ரூ.20,000-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்காக ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா காரணமாக ரூ.12,917 கோடி கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டு வசதி துறைக்கு நிதியுதவியாக உலக வங்கியிடமிருந்து, 1,492 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் நிலுவையில் உள்ள மொத்த கடன் 5,70,189 கோடி ரூபாயாக இருக்கும். வருவாய் வரவினம் 1,80,700.62 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. செலவினங்கள் அதிகரித்ததால், அரசு கடன்கள் பெறுவதை தவிர்க்க இயலாது என்றும் நிதி பற்றாக்குறை மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.99%-ஆக இருக்கும் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி மாநில மொத்த உற்பத்தி மதிப்பீடு 26.69 சதவீதமாக இருக்கும். மொத்த கடன் 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது. இந்நிலையில் தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க திமுக முடிவு செய்திருக்கிறது. தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.