தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பட்ஜெட்டை வாசித்து வரும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சேலம், கடலூர் மற்றும் செல்லையில் புதிதாக கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், 2025-2026-ம்ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் குறித்து அறிவித்து வருகிறார். இதில் பல எதிர்பாரா அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம், சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான நீர் வழங்க நடவடிக்கை, 28 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்,
அதேபோல், கணினி தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும் என்று அறிவித்துள்ள அவர், சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாயில் தமிழ் புத்தக கண்காட்சி, 500 தமிழ் நூல்களை மொழிபெயர்க்க முதற்கட்டமாக ரூ10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அந்த வகையில் தற்போது நூலகம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்து கடலூர், நெல்லை மற்றும் சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த கலைஞர் நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெரும் வகையில், தலா 1 லட்சம் புத்தங்கள் மற்றும் மாநாட்டு கூடங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தென் தமிழகத்தின் அறிவாலயமாகத் திகழ்ந்திடும் மதுரை மாநகரில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு, இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்
இதனைத் தொடர்ந்து தற்போதுர், கோவை மற்றும் திருச்சியில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், அறிவைப் பரவலாக்கிடும் முயற்சிகளின் அடுத்த கட்டமாக, சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலியில் பொதுமக்கள், போட்டித் தேர்வு எழுதிடும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக தலா ஒரு லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூட வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.