/indian-express-tamil/media/media_files/2025/03/14/dDh1LUk20efm4DtrE9OH.jpg)
தமிழக பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த திருச்சி, தஞ்சாவூர் மக்களுக்கு ஊருக்கு ஒன்றாக ஓரிரு அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி உள்ளதாகவும், மெட்ரோவுக்கு நிதி, சாலை மேம்பாட்டுக்கு நிதி உள்ளிட்ட மிகப்பெரிய திட்டங்கள் ஏதும் இல்லாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும், மிக முக்கியமான அறிவிப்புகள் கோவை, மதுரை, சென்னைக்கு சென்று விட்டன என்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 5-வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்காகவும், முக்கியமாக பெண்களுக்கான நிதி திட்டங்களை விரிவுபடுத்துவது போன்ற முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என மக்கள் நினைத்திருந்தனர். மிக முக்கியமாக தஞ்சாவூர், திருச்சி மக்கள் தங்கள் பகுதியின் சாலை மற்றும் பொது மேம்பாட்டிற்கு இந்த பட்ஜெட்டை வெகுவாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால், திருச்சிக்கு இரண்டு, தஞ்சாவூருக்கு ஒன்று என அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி உள்ளது.
ரூ.366 கோடியில் 9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சியில் சூரியூரும், தஞ்சாவூரில் நடுவூரிலும் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலமாக இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் திருச்சி, தஞ்சாவூர் மாநகராட்சிகளில் அன்புசோலை மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன் மூலமாக 5,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதுதான் திருச்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அறிவிப்பாக கருதப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் புதிதாக ஒரு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் எங்களுக்கு இவ்வளவுதானா என்றும், திருச்சி, தஞ்சை மக்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாகவே பார்க்கப்படுகிறது எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். போக்குவரத்தை சமாளிக்க புதிய திட்டங்கள், புதிய வேலை வாய்ப்புகள் என்று தஞ்சை, திருச்சி மக்கள் எதிர்பார்த்திருந்த எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தின் மத்திய பகுதியாக இருக்கும் திருச்சிக்கு இன்னும் நிறைய திட்டங்கள் வரும் என எதிர்பார்த்தோம், ஆனால் அது ஏதும் இல்லாதது ஏமாற்றமே என சமூக ஆர்வலரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவரும், மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளருமான கே.சி.நீலமேகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26-ல் பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததை வரவேற்கிறோம், பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் உள்ள்ட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு, 2676 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். 2000 பள்ளிகளில் ரூ.160 கோடி மதிப்பில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம்.
40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும், மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 1% சலுகை, தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும், 1 லட்சம் மகளிரைத் தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் அறிமுகப்படுத்தப்படும், அரசு ஊழியர்கள் 15 நாட்கள் வரை விடுப்பை சரண்டர் செய்து ஊதியம் பெறும் திட்டம் மீண்டும் அமல் போன்ற திட்டங்களை வரவேற்கின்றோம், பாராட்டுகின்றோம்.
அதே வேளையில் தமிழகத்தின் மையப்பகுதியாக இருக்கும் அதுவும் இரண்டு அமைச்சர்களைக் கொண்ட திருச்சிக்கு பெரிய திட்டங்கள் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் சாலை, மற்றும் உயர்மட்ட மேம்பாலம் உள்ளிட்டவைகளுக்கு நிதி ஓதுக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. மெட்ரோ திட்டங்கள் ஆய்வுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு, ஆனால் மெட்ரோ திட்டத்திற்கு நிதி இந்த பட்ஜெட்டில் ஏதும் ஒதுக்காதது, மெட்ரோ திட்டங்கள் திருச்சியில் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதைப் போன்ற ஒரு நிலை நிலவுவதையே காட்டுகிறது. திருச்சியின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க புதிய திட்டங்கள் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது எனத் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.