தமிழக சட்டசபையில் வரும் 15ம் தேதி பட்ஜெட் தாக்கல்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 15-ம்தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதன் மீது 4 நாட்கள் விவாதம் நடந்த பிறகு சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்பின்னர் கடந்த மாதம் 12ம் தேதி ஜெயலலிதா படத்தை திறந்து வைப்பதற்காக சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. அதன் பிறகு மீண்டும் சபை ஒத்தி வைக்கப்பட்டது. வருகிற 31ம் தேதிக்குள் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இந்த நிலையில், சபாநாயகரின் தனிப்பிரிவு செயலாளராக இருந்த சீனிவாசன் சட்டசபை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் தாக்கல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதித்துறையை கவனித்து வரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 15-ம்தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 15-3-2018ஆம் நாள், வியாழக்கிழமை, காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று காலை 10.30 மணிக்கு 2018-19ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்” என்று கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

×Close
×Close