தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பட்ஜெட்டை வாசித்து வரும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், 2025-2026-ம்ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் குறித்து அறிவித்து வருகிறார். இதில் பல எதிர்பாரா அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம், சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான நீர் வழங்க நடவடிக்கை, 28 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்,
அந்த வகையில் தற்போது, தமிழகத்தில் மிக முக்கிய சுற்றுலாத்தளமாக இருக்கும் ராமேஸ்வரத்தில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலைங்களின் பங்கு முக்கியமானது. இதை உணர்ந்த அரசு, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் விமான நிலையங்களின் விரிக்க பணிகளுக்காக நிலங்களை கையப்படுத்தி வருகிறது.
2938 கோடி மதிப்புள்ள நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. அதேபோல் சேலம், விமான நிலையத்திற்காக ரூ350 கோடி மதிப்பிலான நிலத்தை கையபப்டுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க, பரந்தூரில், புதிய விமான நிலையத்திற்காக பணிகள் விரிவுபடுத்தப்பட:டு வருகிறது, அந்த வகையில் தமிழகத்தில் மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைய உள்ளது.
தென் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக இருக்கும் ராமேஸ்வரத்தில் தான் விமான நிலையம் அமைய உள்ளது. தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள பகுதிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.