தமிழ்நாடு பட்ஜெட் நாளை காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் எப்படி இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பு பரவலாக மக்களிடம் எழுந்திருக்கிறது.
தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற அரங்கில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2018-2019 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு அரசு பெரும் கடன் சுமையில் மூழ்கியுள்ள நிலையில், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. துறை வாரியாக நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட இருக்கின்றன. கல்வித் துறைக்கு மட்டுமே 35,000 கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அரசின் பிரதான வருவாயாக இன்றளவும் ‘டாஸ்மாக்’ நீடிக்கிறது.
மது விலக்கை அமுல்படுத்துவதாக கடந்த தேர்தல் அறிக்கையில் அறிவித்த நிலையில், அது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டிய நெருக்கடி அரசுக்கு இருக்கிறது. முதல் கட்டமாக மது விற்பனையை அரசிடம் இருந்து மாற்றி, பழைய மாதிரி தனியாரிடம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட இருப்பதாக டாஸ்மாக் வட்டாரத்தில் ஒரு கருத்து உலவுகிறது.
இதன் மூலமாக வருவாயை அதிகரிப்பது, ஆளும்கட்சியினருக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது, அரசே மது விற்கிறது என்கிற விமர்சனத்திற்கு முடிவு கட்டுவது என பலமுனை லாபம் அரசுக்கு கிடைக்கும் என்கிறார்கள். ஆனாலும் இந்த முடிவு உறுதி செய்யப்படவில்லை.
விவசாயிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், மின் வாரிய ஊழியர்கள் பலன் பெறுகிற விதமாக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம். ஆனாலும் அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு பெரிய திட்டங்களுக்கான அறிவிப்புகளுக்கு வாய்ப்பு இல்லை.
பட்ஜெட் கூட்டத் தொடரை ஆவேசமாக எதிர்கொள்ள திமுக தயாராகி வருகிறது. காலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு, மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூடி திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் எழுப்பவேண்டிய பிரச்னைகள் குறித்து அதில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்க இருக்கிறார். அதே நாளில் மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அவர்களும் பட்ஜெட் தொடரை எதிர்கொள்வது குறித்து வியூகங்களை வகுக்கிறார்கள்.
டிடிவி தினகரன் நாளை மதுரை மேலூரில் தனிக் கட்சி மற்றும் கொடியை அறிவிக்க இருக்கிறார். அதே வேளையில் சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.