2023-24 ஆம் ஆண்டு நிதி நிலை ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில், திருச்சி மாவட்டம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இரண்டு அமைச்சர்கள் இருந்தபோதிலும், தி.மு.க., அரசுக்கு திருச்சி மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை என்பதை காட்டுகிறது,'' என, திருச்சி மாவட்ட வளர்ச்சிக் குழும தலைவர் வழக்கறிஞர் திலீப் கூறியுள்ளார்.
இது குறித்து நம்மிடம் அவர் கூறுகையில்,
திருச்சி மாவட்ட வளர்ச்சிக்கு என, தி.மு.க.,வில் தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆட்சிக்கு வந்ததும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி என இருவருக்கும் கட்சியிலும் ஆட்சியிலும் மிக முக்கிய பதவிகள் கிடைத்தது. இருவரும் தற்போது நாடளவில் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளை கையில் வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னை சேலம் கோவை மதுரை போன்ற பெரும் நகரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் திருச்சி மாநகருக்கு கொடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் எங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் 110 கோடியில் புதிய கட்டிடங்கள், சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் பெருந்திட்ட வளாகம், திருச்சி மாநகராட்சி பொது இடங்களில் வைஃபை வசதி, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நவீன விடுதி என்பனவை மட்டுமே தமிழ்நாடு பட்ஜெட்டில் திருச்சிக்கு ஒதுக்கப்பட்டன.
ஆனால், 'திருச்சிக்கு மெட்ரோ ரயில், 600 கோடி ரூபாய் செலவில் உயர் மட்ட சாலை, முதல்வர் அறிவித்த திருச்சிக்கான ஒலிம்பிக் நகரம் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, பச்சைமலை சுற்றுலா மேம்பாட்டு திட்டம், உச்சி பிள்ளையார் கோவிலுக்கு 'ரோப் கார்' வசதி, திருச்சியில் புதிய மென்பொருள் பூங்காக்கள், கி.ஆ.பெ., மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனை தரம் உயர்வு, பழைய கழிப்பறை முறை இல்லாத நகரமாக திருச்சி மாற்றப்படும்' என, ஏராளமான அறிவிப்புகளை, இரண்டு அமைச்சர்களும் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். ஆனால், கூறியது போல எதுவுமே பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை, செயல்படுத்தும் முயற்சிகளையும் இவர் அமைச்சர்களும் எடுக்கவில்லை என்பது வேதனையான விஷயம் என கூறியுள்ளார்.
அதே நேரம், திருச்சி மாவட்ட வளர்ச்சிக் குழுமம் சார்பில், அமைச்சர்களிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் அமைப்பு ரீதியாக திருச்சிக்குத் தேவையான நலத்திட்டங்கள் குறித்தும், கல்லணையில் இருந்து முக்கொம்பு வரை, காவிரியில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் துவாக்குடி முதல் ஜீயபுரம் வரையிலான அரைவட்டச் சாலையை, விரைந்து அமைக்க வேண்டும்.
ஜீயபுரம் முதல் சேலம் - சென்னை - சிதம்பரம் - அரியலுார் - தஞ்சைவழியாக அரைவட்டச் சாலை அமைக்க வேண்டும் திருச்சி பால் பண்ணையில் இருந்து துவாக்குடி வரை உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் திருவெறும்பூர், மண்ணச்சல்லுாரில் தாலுகா நீதிமன்றங்கள் குழுமணியில் பூச்செண்டு தொழிற்சாலை. நெல் கொள்முதல் செய்யும் இடங்களில் நெல்மணிகள் திறந்தவெளியில் பாதுகாப்பற்று மழையில் நனைந்தபடி கிடக்கிறது அவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி பகுதிகளில் அதிகளவு வாழை, எலுமிச்சை மற்றும் மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த விளைபொருட்களை பாதுகாக்க குளிர் பதன கிடங்கு இல்லாததால் அவைகள் வீணாகிறது. இப்பகுதியில் குளிர் பதன கிடங்கு அரசு சார்பில் அமைக்க வேண்டும் என மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளோம் என்றார்.
இது குறித்து அமைச்சர் நேரு கூறுகையில், பட்ஜெட்டில் திருச்சி மக்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் இடம் பெறாமல் இருந்திருக்கலாம். அதற்காக, திருச்சி புறக்கணிக்கப்பட்டு விட்டதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. திருச்சிக்கு தேவையானவற்றை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்யும். பொறுமையாக இருந்தால் எல்லாமே கிடைக்கும். அதற்கான ஏற்பாடுகளை, தொடர்ந்து செய்து வருகிறோம். பட்ஜெட்டில் அறிவிக்கப்படாவிட்டாலும், மக்களுக்கு தேவையான அடிப்படையான விஷயங்கள், அரசால் செய்து கொடுக்கப்படும்.
பல்வேறு தரப்பினர் அளித்த கோரிக்கை மனுக்களின் விபரங்கள் முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரம் கோடிக்கு மேலான பல திட்டங்களை திருச்சிக்கு முதல்வர் கொடுத்துள்ளார். அவற்றில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
பல்துறை வாயிலாக செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும், திருச்சி மாவட்ட மக்களுக்கும் கிடைக்கும். பட்ஜெட் அறிவிப்பில் திருச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை என நினைக்க வேண்டாம் அடுத்ததாக வரக்கூடிய மானிய கோரிக்கையின் போது பல்வேறு அரசு துறைகள் சார்ந்த திட்டங்களை முதல்வர் திருச்சிக்கு அறிவிப்பார், பொறுத்திருங்கள் என்றார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.