“போக்குவரத்து ஊழியர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை”: அமைச்சர் திட்டவட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் இன்று 5-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை முன்பதிவு, வேலைநிறுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் இன்று 5-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட முன்பதிவு, வேலைநிறுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று (திங்கள் கிழமை) தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து ஊழியர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இல்லை எனவும், சில தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை திசை திருப்புவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்க எவ்வித கௌரவ குறைச்சலும் இல்லை எனவும், 7 நாட்களுக்குள் ஊழியர்கள் விளக்கம் கொடுக்காவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இல்லையென்றால், பணிக்கு புதிய ஆட்களை எடுக்க வேண்டியிருக்கும் என கூறினார்.

இன்று போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து ஊழியர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

×Close
×Close