தி.மு.க எம்.பி ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடந்துள்ளது.
தி.மு.க எம்.பி ஆ.ராசா இந்துக்களை இழிவாக பேசியதாக கூறி அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி, பா.ஜ.க உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர்.
இதையும் படியுங்கள்: இந்து முன்னணி நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு; கோவை எஸ்.பி நேரில் ஆய்வு
இந்தநிலையில், ஆ.ராசா பேச்சைக் கண்டித்தும், தமிழக அரசு ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் புதுச்சேரியில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
அதன்படி, இன்று புதுச்சேரி முழுவதும் கடைகள் திறக்கப்படவில்லை. இன்று விடியற்காலை முதல் டீ கடைகள், உணவங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெரிய மார்க்கெட் உட்பட அத்தியாவசிய விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை.
மேலும், தனியார் பேருந்துகள் மற்றும் டெம்போக்கள் இயங்கவில்லை. இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மிக குறைந்த அளவில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக, அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக புதுச்சேரி முழுவதும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழக அரசு பேருந்துகள் மீது கல் வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வில்லியனூர் பகுதியில் 3 தமிழக அரசு பேருந்துகளை சிலர் கல் வீசி தாக்கியுள்ளனர். இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. இதேபோல் ஒரு தனியார் கல்லூரி பேருந்து மற்றும் 1 சொகுசு பேருந்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil